Increasing corona damage! -Siege of assembly in Puducherry!

புதுச்சேரியில் அதிகரித்து வரும் கரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்க தவறிய ஆளுநரை திரும்பப் பெற வேண்டும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 10 ஆயிரம் உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரின் செயல்படாத தன்மையைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சட்டசபை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

Advertisment

அதையடுத்து 100-க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் தடுப்புகளை மீறி சட்டப்பேரவை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

Advertisment

மேலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிராகப் பல்வேறு முழக்கங்களை எழுப்பிய நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவைக்கு தனது கார் மூலம் வந்தார். அப்போது நாராயணசாமியின் காரை மறித்துப் போராட்டம் நடத்தினர். அதையடுத்து நாராயணசாமி இறங்கி தனது அலுவலகத்திற்குச் சென்றார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் பேரில் முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

கட்டுப்பாடுகள், தடுப்புகளை மீறி சட்டப்பேரவையில் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம், முற்றுகை, முதலமைச்சர் வாகனம் மறிப்பு என சட்டசபை வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment