ADVERTISEMENT

சிறுமி கொலை வழக்கு; நீதிபதி அதிரடி உத்தரவு

07:09 PM Mar 07, 2024 | prabukumar@nak…

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

ADVERTISEMENT

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு 20 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்திருந்தது. அதே சமயம் சிறுமியின் பெற்றோர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ள பா.ஜ.க. அமைச்சர் நமச்சிவாயம், குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ் அதிகாரி மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும் சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் ரங்கசாமியின் உறுதிமொழியை அடுத்து ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்த நிலையில், உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி சிறப்பு புலனாய்வு குழு இன்று காலை முதல் விசாரணையை தொடங்கியுள்ளது. அதே சமயம் காவலர்கள் மீது எழுந்த புகாரை அடுத்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் கூண்டோடு மாற்றப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் சிறுமி கொலை வழக்கில் கைதான கருணாஸ் (வயது 19) மற்றும் விவேகானந்தன் (வயது 59) ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டிருந்தனர். இந்த சூழலில் வழக்கறிஞர்கள் இவர்கள் இருவரையும் தாக்க தயாராக இருந்ததால் நேரடியாக மத்திய சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து மத்திய சிறைக்குச் சென்ற நீதிபதி இளவரசன் விசாரணைக்குப் பின் இருவரை 15 நாள் காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். முன்னதாக சிறுமி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து பேரணி மேற்கொண்டு சட்டப்பேரவை அருகே ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இந்த பேரணியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில், தி.மு.க. காங்கிரஸ், வி.சி.க. கட்சி நிர்வாகிகள் என சுமார் 500 பேர் பங்கேற்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT