ADVERTISEMENT

“இனி வரும் காலங்களில் அரசு ஊழியர்கள் சில தியாகங்களைச் செய்யத் தயாராக வேண்டும்”- புதுச்சேரி நாராயணசாமி பேட்டி!

11:48 AM May 02, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


புதுச்சேரி மாநிலத்திலிருந்து வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் தங்கியிருப்பவர்கள் புதுச்சேரி வரவும், புதுச்சேரியில் தங்கியிருக்கும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தோர் வெளியேறவும் தொடர்பு கொள்ள வேண்டிய இணையத்தளத்தை முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (01/05/2020) தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (01/05/2020) செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “மத்திய அரசு புதுச்சேரி மாநில பிராந்தியங்களான காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளைப் பச்சை பகுதிகளாகவும், புதுச்சேரியை ஆரஞ்சு பகுதியாகவும் அறிவித்துள்ளது. மத்திய அரசின் விதிமுறைகள் மே 4- ஆம் தேதி அமலுக்கு வர உள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த மூவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்றைய தினம் தெரியவந்துள்ளது.


வெளிமாநிலங்களில் உள்ள மக்களை அந்தந்த மாநிலங்கள் அழைத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மற்ற மாநிலங்களில் உள்ளவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்களை அழைத்துவரவும் ஏற்பாடுகள் செய்ய உள்ளோம். இதேபோன்று வெளிமாநிலத்தில் தங்கி இருப்பவர்களும் எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். வெளி மாநிலங்களில் உள்ளோர் அவரவர் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல ரயில்களை இயக்க பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன்.


இந்த ஊரடங்கை புதுச்சேரி பெற்றோர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். நமது மாநிலத்தைச் சார்ந்தவர்கள் விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். குறைந்த பட்சம் வரும் 2 ஆண்டுகளுக்கு முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய சூழலில் உள்ளோம். மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும் ஏப்ரல் மாதம் முழுமையாகச் சம்பளத்தை அளித்தோம். இனி வரும் காலங்களில் அரசு வருமானத்தை அதிகரிக்க முடியாவிட்டால், கரோனா பாதிப்பு தொடருமானால் அரசு ஊழியர்கள் சில தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஒரு சாரார் பட்டினியாக உள்ளதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. எல்லா தியாகங்களுக்கும் அனைத்து தர மக்களும் தயாராக இருக்கவேண்டும். கரோனா நோய் முழுமையாக அகற்றப்படும் வரை நாம் நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT