ADVERTISEMENT

புதுச்சேரியில் போதைப்பொருட்கள் விற்பனைக்கு தடை- முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு!

07:35 PM Dec 04, 2019 | kalaimohan

புதுச்சேரியில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றும், மீறி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,

ADVERTISEMENT

ADVERTISEMENT

"கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வது புதுச்சேரியில் தடை செய்யப்பட்டுள்ளது. புகையிலை என்ற பெயரில் இளைஞர்கள், மாணவர்களிடம் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்து இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்குவதாக புகார்கள் வந்துள்ளன. எனவே கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற எந்த விதமான போதை பொருட்களும் விற்பனை செய்யக்கூடாது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்து அவர்களின் எதிர்காலத்தை வீணாக்குவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் அத்தகைய போதை பொருட்களை பயன்படுத்தி வாழ்வை வீணாக்கி கொள்ளும் சிறு பிள்ளைகளில் தமது பிள்ளைகளும் இருக்கலாம் என்கிற உணர்வுடன் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.

இதுதொடர்பாக குட்கா என்ற பெயரிலும், புகையிலை என்ற பெயரிலும் போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் காரைக்காலில் கைது செய்யப்பட்டு சிறையிடைக்கப்பட்டுள்ளனர். எனவே வியாபாரிகள் அனைவரையும் நான் வேண்டி கேட்டுக்கொள்வது கஞ்சா என்ற பெயரிலும், குட்கா என்ற பெயரிலும் போதை பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்பதுதான்.

காவல்துறையினருக்கு, 'கடைகளில் ஆய்வு செய்து குட்கா என்ற பெயரில் விற்கப்படும் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடை செய்யுமாறும், கடும் நடவடிக்கை எடுக்குமாறும்' உத்தரவிட்டுள்ளேன். எனவே வியாபாரிகள் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT