ADVERTISEMENT

புதுச்சேரி ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த காங்கிரஸ், தி.மு.க.!

07:48 PM Apr 16, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரி ஆளுநரின் தேநீர் விருந்தை தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் புறக்கணிக்க அறிவித்துள்ளனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழக அரசியல் கட்சிகளுக்கு அண்மையில் தேநீர் விருந்தில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்தார். ஆளுநரின் இந்த தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளுநர் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது விருந்தில் பங்கேற்கவில்லை என்று அறிவித்தன. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் ஆளுநர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தன.

இந்நிலையில், தமிழகத்தைப் போல், புதுச்சேரியிலும் சித்திரை முழு நிலவு தேநீர் விருந்தில் பங்கேற்க தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அளிக்கும் சித்திரை முழு நிலவு தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து, புதுச்சேரி தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் ம.தி.மு.க. உள்ளிட்டத் தோழமைக் கட்சிகளும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

எனினும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இன்று (16/04/2022) மாலை அளித்த தேநீர் விருந்தில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள். என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இதனிடையே, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், "தேநீர் விருந்து நிகழ்வை அரசியலாக்க வேண்டாம். எல்லாவற்றிலும் அரசியலைப் புகுத்தினால் யாரும் நல்லுறவுடன் இருக்க முடியாது; காரணமின்றிப் புறக்கணிக்க வேண்டாம். நான் சூப்பராக செயல்படுகிறேன் என புதுச்சேரியில் உள்ள யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்" எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT