ADVERTISEMENT

"அழிந்து கொண்டிருக்கும் தமிழை காப்பாற்ற வேண்டும்"- மருத்துவர் ராமதாஸ் உருக்கம்! 

05:58 PM Dec 10, 2019 | santhoshb@nakk…

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசின் முத்து விழாவை முன்னிட்டு புதுச்சேரி கம்பன் கலையரங்கில் மருத்துவர் ராமதாஸ்- சரஸ்வதி ராமதாஸ் ஆகியோருக்கு விழா நடைபெற்றது.

ADVERTISEMENT


புதுச்சேரி மாநில பா.ம.க அமைப்பாளர் கோ. தன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்டு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர் பேசும்போது, " தமிழ் நாட்டிலும் சரி புதுச்சேரியிலும் சரி நாம் செல்கின்ற பகுதிகளில், சாலையோரங்களில் தாய்மொழி தமிழை விட அதிகமாக ஆங்கிலமே கோலோச்சுகிறது. தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்கிறோம். ஆனால் சாலையோரங்களில் உள்ள கடைகளின்

ADVERTISEMENT

பெயர்ப்பலகைகளில் தமிழ்மொழி காணப்படுவதில்லை. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தமிழை பேசுகிறவர்கள் அரைகுறையாக ஆங்கிலமும், பிறமொழிகளும் கலந்து பேசுகிறார்கள். நான் ஓராண்டாக கூறி வருகிறேன்.

தமிழ்நாட்டில் எங்கும் தமிழ் இல்லை என்று நான் கூறி வருகிறேன். அதை இல்லை என்று மறுப்பவர்கள் என்னுடன் வாதாடுவதற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். தமிழ் இருக்கிறது என்று வாதாடி வெற்றி பெற்றால் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். என்னோடு வாதாடுவதற்கு யாரும் முன்வரவில்லை.


நாம் வாழ்கின்ற நாடு தமிழ்நாடு. ஆனால் இங்கு தமிழ் இல்லை. இங்கிருந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு போன்ற நூல்களை ஆராய்ச்சி செய்து தமிழை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து சென்றவர்களுக்கு இருக்கின்ற தமிழுணர்வு இங்கேயே வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு இல்லை. தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது. தமிழ் அழீக்கப்பட்டு கொண்டிருக்கிறது. என்னுடைய ஆசையெல்லாம் நம்முடைய தாய்மொழி தமிழ் வளர வேண்டும். எல்லா நிலையிலும் தமிழ்மொழி கோலோச்ச வேண்டும் என்பதுதான்" என உருக்கமாக குறிப்பிட்டார்.


இந்த விழாவில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, அரசியல் ஆலோசனை குழு தலைவர் பேராசிரியர் தீரன், பா.ம.க பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, கவிஞர் ஜெயபாஸ்கரன் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT