ADVERTISEMENT

"ஒரே ஒரு தவறு கூட" - புதிய மத்திய அமைச்சர்களிடம் எச்சரித்த பிரதமர் மோடி!

10:59 AM Jul 09, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 7ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் பலர் புதிதாக மத்திய அமைச்சர் பதவியையும், மத்திய இணை அமைச்சர் பதவியையும் ஏற்றுக்கொண்டனர். இந்தநிலையில், நேற்று (08.07.2021) பிரதமர் தலைமையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, புதிதாக பதவியேற்ற அமைச்சர்களிடம் உரையாற்றினார். இந்தநிலையில் பிரதமர் மோடி, புதிய அமைச்சர்களிடம் பேசியவை குறித்து அதிகாரப்பூர்வ வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பிரதமர் மோடி, புதிய அமைச்சர்களிடம் கரோனா பரவல் குறித்து எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி, "நெரிசலான இடங்கள், முகக்கவசம் இல்லாமல் சுற்றும் மக்கள், தனிமனித இடைவெளியைக் காற்றில் பறக்கவிடுவது உள்ளிட்டவை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நம்மிடம் அச்ச உணர்வைத் தூண்ட வேண்டும். இது கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் இருப்பதற்கான நேரம் அல்ல. ஒரே ஒரு தவறு கூட மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என கூறியுள்ளார்.

தொடர்ந்து "அமைச்சர்களாகிய நமது நோக்கம் பயத்தைத் தூண்டுவதாக இருக்கக் கூடாது. சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக்கொள்வதாக இருக்க வேண்டும். அப்போதுதான் இனிவரும் காலத்தில் இந்த தொற்று நோயைத் தாண்டி நாம் செல்ல முடியும்" எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தக் கூட்டத்தில், பதவியிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர்களைப் பிரதமர் மோடி பாராட்டியதாக தெரிவித்துள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்கள், அவ்வாறு நீக்கப்பட்ட அமைச்சர்களை சென்று சந்தித்து, அவர்களின் வழிகாட்டுதல்களைப் பெறுமாறு புதிய அமைச்சர்களை பிரதமர் கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளன. ஊடகங்களிடம் தேவையற்றதைப் பேசுவதை தவிர்க்குமாறும் பிரதமர் மோடி, புதிய அமைச்சர்களை அறிவுறுத்தினார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT