ADVERTISEMENT

“சாதியை வைத்துப் பெண்களைப் பிரிக்க நினைக்கிறது காங்கிரஸ்...” - பிரதமர் மோடி

05:44 PM Sep 30, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளார்.

அந்த வகையில், இன்று (30-09-23) சட்டீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் நகரில் நடக்கும் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “சட்டீஸ்கர் மாநிலத்தில் காணப்படும் உற்சாகம், மாற்றத்தின் அறிவிப்பு ஆகும். இனியும் காங்கிரஸ் கட்சியின் அட்டூழியங்களை சட்டீஸ்கர் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இந்த மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்தால் தான் உங்கள் கனவுகள் நிறைவேறும். டெல்லியில் இருந்து நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், இங்குள்ள காங்கிரஸ் அதை தோல்வியடைய செய்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டீஸ்கருக்கு 1000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. சாலை, ரயில், மின்சாரம் எனப் பல்வேறு வளர்ச்சி திட்டங்களில் நாங்கள் எந்தவித பணத் தட்டுப்பாடும் வைக்கவில்லை.

நான் கொடுத்த இன்னும் ஒரு உத்தரவாதத்தை முடித்துவிட்டேன். இப்போது மக்களவையிலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும். இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பா.ஜ.க ஆட்சியில் தான் சாத்தியம். நமது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அந்த மசோதாவிற்கு கையெழுத்திட்டு, அந்த சட்டத்தை நேற்றே உருவாக்கிவிட்டார். ஆனால், பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மசோதாவை நிறைவேற்றி விட்டதாக காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மிகவும் கோபத்தில் இருக்கின்றனர். அனைத்து பெண்களும் எப்படி மோடிக்கு மட்டுமே ஆசீர்வாதம் செய்கின்றனர் என்று அவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். பெண்களுடைய ஒற்றுமைக்கும் விழிப்புணர்வுக்கும் அவர்கள் அஞ்சுகிறார்கள். அவர்கள் பெண்களை சாதியை வைத்து பிரிக்க நினைக்கிறார்கள். அவர்களின் பொய்களில் விழுந்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT