ADVERTISEMENT

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

03:57 PM Apr 23, 2024 | mathi23

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT