ADVERTISEMENT

சுதந்திர இந்தியாவின் வெற்றிகரமான நிர்வாகி பிரதமர் மோடி - அமித்ஷா!

03:37 PM Oct 28, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக குஜராத் முதல்வராகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 20 ஆண்டுகளில் சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தின் முதல்வராகவும், அதன்பிறகு தொடர்ந்து 7 வருடங்களுக்கு மேலாக இந்தியாவின் பிரதமராகவும் நரேந்திர மோடி இருந்துவருகிறார்.

இந்தநிலையில், நரேந்திர மோடி 20 வருடங்கள் மாநில மற்றும் மத்திய அரசுகளின் தலைவராக இருப்பதைக் கொண்டாடும் விதமாக பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அந்தவகையில் நேற்று (27.10.2021), "ஜனநாயகத்தை அளித்தல்: அரசாங்கத்தின் தலைவராக நரேந்திர மோடியின் இருபது ஆண்டுகளை மதிப்பாய்வு செய்தல்" என்ற பெயரில் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுதந்திர இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான நிர்வாகி நரேந்திர மோடி என தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் அமித்ஷா பேசியது வருமாறு,


"1960களுக்குப் பிறகு 2014 வரை, பல கட்சி அமைப்பு செயல்படுமா என்று மக்கள் கேள்வி எழுப்பிவந்தனர். 2014ஆம் ஆண்டுக்குள் ராமராஜ்ஜிய கனவு சிதைந்து போனது. மக்கள், மிகுந்த பொறுமையுடன், பாஜகவுக்கு வாக்களித்தனர். முதல்முறையாக, காங்கிரஸ் அல்லாத அரசு முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. பணிவின் காரணமாக பிரதமர் மோடி, தன்னை முதன்மை சேவகன் என்று அழைத்துக்கொள்கிறார். ஆனால், அவர் சுதந்திர இந்தியாவின் மிக வெற்றிகரமான நிர்வாகி என்று நான் சொல்வேன்.

உங்களைவிட மோடியை யாருக்கு நன்றாகத் தெரியும் என்று நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் என்னிடம் சொன்னார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது தவறு. என்னைவிட நாட்டு மக்களுக்கு அவரை நன்றாக தெரியும். கொள்கைகளை வகுக்கும்போது அளவினைப் பார்த்து திட்டங்கள் அனைவருக்குமானதாக வேண்டும் என்று முடிவு செய்தார். முன்பெல்லாம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனாளிகளை மனதிற்கொண்டே திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. 2016இல் பணமதிப்பு இழப்பு அறிவிக்கப்பட்டபோது, உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் ஆபத்து இருப்பதை உணர்ந்தோம். ஆனால் மக்கள் மோடியின் பின்னால் நின்று அந்த முடிவை ஆதரித்தனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, இந்திய எல்லையோடு யாரும் எந்த விளையாட்டையும் விளையாட முடியாது என்ற செய்தி உலகத்திற்கே சென்றது. சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ரத்து செய்யப்பட்டதன் மூலம், ஜம்மு - காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. அப்போது நாட்டில் எங்கும் ஒரு கலவரம் கூட நடைபெறவில்லை. ராம ஜென்மபூமி மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு எந்த முணுமுணுப்பும் ஏற்படவில்லை. நரேந்திர மோடி, இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பை உயர்த்தி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்."

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT