ADVERTISEMENT

"விவசாயிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்" -உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...

11:11 AM Dec 05, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின், 'புராரி' பகுதியில் அமைந்துள்ள மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து பத்தாவது நாளாக விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசுடன் நான்கு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ரிஷாப் சர்மா வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் பாரிகர் மூலம் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், "வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளால் போக்குவரத்து முடக்கம் ஏற்படக்கூடாது என்பதற்காகப் புராரியில் உள்ள நிராங்கரி மைதானத்தில் போராட்டத்தை நடத்திக்கொள்ள போலீஸார் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதித்தனர். ஆனால், தற்போது விவசாயிகள் டெல்லி சாலைகளில் நடத்திவரும் போராட்டத்தால், எல்லைகள் மூடப்பட்டுள்ளன, போக்குவரத்து முடங்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வதில் பல்வேறு சிரமங்களையும், பாதிப்புகளையும் எதிர்கொள்கிறார்கள்.

கரோனா வைரஸ் குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடக்காமல் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்றாக சாலைகளில் முகக்கவசம் இன்றி, சமூக விலகலைக் கடைபிடிக்காமல் கூடியுள்ளார்கள். இதனால் கரோனா வைரஸ் பரவலும் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஷாஹீன்பாக் பகுதியில் நடத்தும் போராட்டம் குறித்த வழக்கில் கடந்த அக்டோபர் 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 'பொது இடங்களைக் காலவரையின்றி ஆக்கிரமித்து போராட்டம் நடத்தக்கூடாது. போராட்டம், எதிர்ப்புகளைத் தெரிவிக்க அதற்காக ஒதுக்கப்பட்ட தனி இடத்தில் தெரிவிக்கலாம்' எனத் தெரிவித்திருந்தது. அதன்படி, டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை உடனடியாக அப்புறப்படுத்தி டெல்லி போலீஸார் ஏற்கெனவே ஒதுக்கிய இடத்தில் போராட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT