arvind kejriwal supports farmers rally

விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் தாங்கள் ஆதரிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Advertisment

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின், 'புராரி' பகுதியில் அமைந்துள்ள மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசுடன் ஐந்து கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தை வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனிடையே நாளை நாடு தழுவிய பந்திற்கும் விவசாயிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் தாங்கள் ஆதரிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Advertisment

12வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டத்தில், அவர்களுக்கு மாநில அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை 10 மணி அளவில் போராட்டக் களத்திற்கு நேரில் சென்றார். அங்கு விவசாயிகளுக்குசெய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். அவர்களின் பிரச்சனையும் கோரிக்கைகளும் முக்கியமானவையாகும். நானும் எனது கட்சியும் ஆரம்பத்திலிருந்தே அவர்களுடன் துணை நிற்கிறோம்.

அவர்கள் ஆரம்பத்தில் போராட்டம் நடத்தத் தொடங்கியபோது, டெல்லி காவல்துறை ஒன்பது அரங்கங்களைச் சிறைகளாக மாற்ற எனக்குக் கடுமையாக அழுத்தம் கொடுத்தது. ஆனால் நாங்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. நாங்கள் எடுத்த முடிவு விவசாயிகளுக்கு உதவிகரமாக அமைந்தது. நான் இங்கு முதல்வராக வரவில்லை, ஒரு சேவகனாகத்தான் வந்துள்ளேன். விவசாயிகள் இன்று சிக்கலில் உள்ளனர். நாங்கள் அவர்களுடன்தான் நிற்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறும் பாரத் பந்த்தை ஆதரிக்கிறது. எங்கள் கட்சித் தொண்டர்களும் இதில் பங்கேற்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment