ADVERTISEMENT

கள்ளநோட்டுகளை தயாரித்த நபர்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல் 

08:23 AM May 21, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

யூடியூப் பார்த்து கள்ளநோட்டுகளை அச்சடித்து மார்க்கெட்டில் மாற்ற முயன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம், சித்தூர் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவர், அந்தப் பகுதியில் டீக் கடை வைத்து நடத்திவருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலமனேரி பகுதியில் இயங்கி வரும் காய்கறி மார்க்கெட்டில் 50 ரூபாய்க்கு காய்கறி வாங்கியுள்ளார். அந்தக் கடையில் இவர் ஒரு 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அங்கு சில்லறை வாங்கிக்கொண்ட அவர், அடுத்த கடையில் சில காய்கறிகளை வாங்கிக்கொண்டு மற்றொரு 200 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அப்போது அந்தக் கடைக்காரர் அந்த நோட்டை வாங்கி பார்த்துவிட்டு அதில் சந்தேகம் அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக பலமனேரி நகர காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அந்தத் தகவலையடுத்து அங்கு வந்த பலமனேரி நகர காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர், உதவி ஆய்வாளர் சுப்பா ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தான் கொடுத்தது கள்ள நோட்டு தான் என்று ஒப்புக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், ‘கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக கள்ளநோட்டுகளை தயாரிப்பது குறித்து யூடியூப்பில் பார்த்து தெரிந்துகொண்டேன். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் பெங்களூரு சென்று ஒரு பிரிண்டர் வாங்கிவந்து வீட்டிலேயே கள்ளநோட்டுகளை தயார் செய்தேன். பிறகு அதனை புழக்கத்தில் விட சந்தைகளில் அந்த நோட்டுகளைக் கொண்டு பொருள்கள் வாங்கினேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

பிறகு காவல்துறையினர் அவரை அழைத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்று அங்கு கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்திய பிரிண்டர் மற்றும் கள்ள நோட்டு தயாரிப்புக்கு உதவிய மற்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் வீட்டில் தயாரித்து வைத்திருந்த கள்ளநோட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT