நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அதே வேளையில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், அந்த மாநிலங்களிலும் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற மே 13ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. அதே சமயம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டையும், நிர்வாகத்திறன் குறித்து தெலுங்கு தேசம் கட்சி விமர்சனம் செய்து வருகிறது. அதே போல், தெலுங்கு தேச கட்சியை பற்றியும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முன்வைத்து வருகிறது.
175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அனைத்து இடத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில், பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 6 இடங்களிலும் போட்டியிட உள்ளது. மேலும், வாக்காளர்களை கவரும் விதமாக, அங்கு போட்டியிடும் கட்சிகள் வித விதமாக வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. அந்த வகையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, குறைந்த விலையில், தரமான மதுபானம் வழங்கப்படும் என்று வாக்குறுதியை அளித்துள்ளார்.
இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது, “ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவேன் என்று 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜெகன் மோகன் ரெட்டி, ஆட்சியில் அமர்ந்ததும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டார். அனைத்து பொருட்களின் விலையும், வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இவற்றில் உழைக்கும் மக்களின் மதுபானங்களும் விதி விலக்கல்ல. மதுவின் விலையை உயர்த்தியவர்கள், அதற்கேற்றவாறு தரத்தையாவது உயர்த்திருக்க வேண்டும். அதிக லாபத்துக்கு தரமற்ற மதுவை விநியோகித்து நம் மக்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறார்கள். தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் போது தரமானது மட்டுமன்றி, விலை குறைவாகவும் மதுபானத்தை அளிக்கவும் நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்று கூறினார்.