ADVERTISEMENT

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்; 4 பேருக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு

05:07 PM Dec 21, 2023 | prabukumar@nak…

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் நாளை (21.12.2023) வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரின் அலுவல்கள் கடந்த 13 ஆம் தேதி (13-12-23) வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற மக்களவைக்கு பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசினர். மேலும், 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.

ADVERTISEMENT

அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இரண்டு பெண்களும் வண்ணப் புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான டிசம்பர் 13 ஆம் தேதி இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து நாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக் குப்பிகளை வீசியதாகக் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 4 பேரையும் 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு அனுமதி கோரியது. மேலும் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்பது திட்டமிடப்பட்ட சதி என டெல்லி போலீசார் வாதத்தை முன் வைத்தனர். இதனையடுத்து 4 பேருக்கும் 7 நாள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் குற்றச்சாட்டுக்குள்ளான 4 பேரின் நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்திலிருந்து அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 4 பேரையும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவில் மேலும் 15 நாட்கள் காவலில் வைக்க அனுமதி அளித்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT