ADVERTISEMENT

பஞ்சாபில் பிரதமர் கார் அருகே பாஜக தொண்டர்கள் கோஷம்; வெளியான புதிய வீடியோ - பிரதமரை விமர்சித்த காங்கிரஸ்!

01:07 PM Jan 07, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பஞ்சாபில் சாலை வழியாக பயணம் செய்தபோது, போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். பிரதமர் சென்ற கார் மறிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இதற்கிடையே பிரதமர் செல்லும் பாதை மறிக்கப்பட்டிருப்பது குறித்து எஸ்.பி.ஜிக்கு (சிறப்பு பாதுகாப்பு குழு) தெரியாமல் போனது எப்படி?, பாகிஸ்தானையொட்டியுள்ள ஒரு மாநிலத்தில் 100 கிலோமீட்டர் தொலைவு வரை பிரதமரை காரில் பயணிக்க எஸ்.பி.ஜி அனுமதித்தது எப்படி? என பலர் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று ஒரு கூட்டத்தில் பேசிய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாபில் ஆட்சியை கலைக்கவே பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி என குற்றச்சாட்டு எழுப்பப்படுவதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "பிரதமர் பங்கேற்கவிருந்த கூட்டத்தில் வெற்று சிவப்பு நாற்காலிகள் மட்டுமே காணப்பட்டன, இது மாநிலத்தில் அவரது செல்வாக்கற்ற தன்மையைக் காட்டியது. இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற அற்பமான காரணத்தை கூறி அவர் தேசிய தலைநகருக்கு திரும்பினார். பிரதமர் தனது பயணத்தை ரத்து செய்ததற்கு கூறிய தவறான சாக்கு என்பது பஞ்சாபை களங்கப்படுத்துவதற்கும், ஜம்மு காஷ்மீரில் முன்பு செய்யப்பட்டதைப் போல பஞ்சாப் மாநிலத்தில் ஜனநாயகத்தை படு கொலை செய்யவும் செய்யயப்பட்ட பெரிய சதியின் ஒரு பகுதியாகும். பிரதமர் மற்றும் அவரது கூட்டாளிகளின் ஏமாற்று வித்தை மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. தயவு செய்து அரசியல் ஆதாயத்திற்காக மாநிலத்தையும் மக்களையும் அவதூறு செய்வதை நிறுத்துங்கள்" என கூறியுள்ளார்.

இந்தநிலையில் பிரதமர் வாகனகம் மேம்பாலத்தில் சிக்கியிருந்தபோது, அந்த வாகனத்தின் அருகே நின்று பாஜக ஜிந்தாபாத், நரேந்திர மோடி ஜிந்தாபாத் என கையில் பாஜக கொடியுடன் சிலர் கோஷமிடும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவையோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "மோடி ஜி, நீங்கள் பஞ்சாப் மக்களையும், காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் அரசாங்கத்தையும் களங்கப்படுத்த முயற்சித்தீர்கள் என்பதற்கு இது ஆதாரம் இல்லையா? பிரதமருக்கும் தேசத்தின் பாதுகாப்புக்கும் ஒரே அச்சுறுத்தல் பாஜக தொண்டர்கள்தானா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே பிரதமர் பயணித்த சாலை மறிக்கப்பட்டது தொடர்பாக விளக்கமளித்த வேளாண் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, "பாஜக கொடியுடன் நரேந்திர மோடி ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பிய ஒரு குழு மட்டுமே பிரதமருடையே கான்வாய் அருகே சென்றது. எனவே, பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்பது முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT