ADVERTISEMENT

கிரிப்டோகரன்சி, சமூக வலைதளங்கள் தொடர்பாக உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!

05:33 PM Dec 11, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், சர்வாதிகாரத்தை எதிர்த்தல், ஊழலை எதிர்த்து போராடுதல், மனித உரிமைகளுக்கான மரியாதையை ஊக்குவித்தல் ஆகிய கருப்பொருள்களில் ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டை காணொளி வாயிலாக நடத்தினார். நூறுக்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, கிரிப்டோகரன்சி மற்றும் சமூக வலைதளங்கள் தொடர்பாக உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது வருமாறு; இந்த உச்சி மாநாட்டில் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். ஜனநாயக உணர்வு என்பது நமது நாகரிக நெறிமுறைகளுக்கு இன்றியமையாதது. பல நூறாண்டு காலனி ஆட்சியால் இந்திய மக்களின் ஜனநாயக உணர்வை அடக்க முடியவில்லை. இந்தியாவின் சுதந்திரத்துடன் அது மீண்டும் தனது முழு வெளிப்பாட்டை பெற்றது. மேலும் கடந்த 75 ஆண்டுகளில் ஜனநாயக தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இணையற்ற ஒரு கதைக்கு வழிவகுத்தது.

இது முன்னோடியில்லாத, அனைத்து துறைகளிலும் சமூக-பொருளாதார சேர்க்கை நடைபெற்ற கதை. கற்பனை செய்ய முடியாத அளவில் சுகாதாரம், கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு ஆகியவற்றில் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் நடைபெற்ற கதை. இந்தியக் கதை உலகிற்கு ஒரு தெளிவான செய்தியைக் கொண்டுள்ளது. அரசால் ஜனநாயகத்தை அளிக்க முடியும், ஜனநாயகம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகம் தொடர்ந்து அளிக்கும்.

"இன்றைய கூட்டம் ஜனநாயக நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு சரியான தளத்தை வழங்கியுள்ளது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதிலும், புதுமையான டிஜிட்டல் தீர்வுகள் மூலம் நிர்வாகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதிலும் உள்ள தனது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. சமூக ஊடகங்கள் மற்றும் கிரிப்டோகரன்சிகள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய நெறிமுறைகளை நாம் கூட்டாக வடிவமைக்க வேண்டும். அதன்மூலம் அவை ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும்.

பல கட்சி தேர்தல்கள், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சுதந்திரமான ஊடகம் போன்ற கூறுகள் ஜனநாயகத்தின் கட்டமைப்பு அம்சங்களாகும். எவ்வாறாயினும், நமது குடிமக்கள் மற்றும் நமது சமூகங்களுக்குள் இருக்கும் உணர்வு மற்றும் நெறிமுறைகளே ஜனநாயகத்தின் அடிப்படை பலம். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT