ADVERTISEMENT

பங்குச் சந்தை: 22000 புள்ளிகள் இலக்கை நோக்கி நிப்டி! - முதலீட்டாளர்கள் உற்சாகம்!       

10:54 AM Jan 13, 2024 | ArunPrakash

இந்திய பங்குச் சந்தைகள் கடந்த வாரம் ஓரளவு உயர்வுடன் முடிவடைந்துள்ளது. வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை (ஜன. 12) மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 847.28 (1.18%) புள்ளிகள் உயர்ந்து 72568 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச் சந்தையான நிப்டி 247.35 புள்ளிகள் உயர்ந்து (1.14%) 21894 புள்ளிகளில் முடிவடைந்தது. வரும் வாரத்தில் நிப்டி 22000 புள்ளிகளைக் கடந்து வரலாற்று உச்சத்தை எட்டும் எனச் சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடைசி மூன்று அமர்வுகள் ஏற்றத்துடன் இருந்ததால் முதலீட்டாளர்கள் உற்சாக மனநிலையில் இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

அதேநேரம், அடுத்தடுத்து வெளியாக உள்ள மூன்றாவது காலாண்டு முடிவுகளைப் பொறுத்து, சந்தையில் அதிகளவில் ஏற்ற இறக்கங்களும் இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஜன.8 & ஜன.12 வரையிலான வாரத்தில் தேசிய பங்குச் சந்தையில் ஐடி துறை சார்ந்த பங்குகள் 4 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. குறிப்பாக ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டிசிஎஸ் மற்றும் டெக் மஹிந்திரா பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு கணிசமாக லாபம் கிடைத்தது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை போக்குகளால் கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகள் மெதுவாகவே வர்த்தகத்தைத் தொடங்கின என்றாலும், வாரத்தின் இறுதிப் பகுதி ஏற்றத்துடன் முடிந்தது.

ADVERTISEMENT

வரும் அமர்வுகளில் நிப்டி சாதனை அளவாக 22000 முதல் 22150 புள்ளிகள் வரை உயரக்கூடும் என்கிறது ரெலிகர் பங்குத் தரகு நிறுவனம். குறிப்பாக, டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்கள் மற்றும் முன்னணி தனியார் வங்கிகளின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் ஓரளவு நேர்மறையாக உள்ளதால் நிப்டியின் குறியீட்டு எண் புதிய உச்சத்தைத் தொடும் என்கிறார்கள். ஆக, ஐடி மற்றும் வங்கி பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த இது சரியான தருணம் எனக் கூறலாம். உண்மையில், ஐடி பங்குகளைப் பொறுத்தவரை மூன்றாம் காலாண்டு என்பது அவ்வளவு லாபகரமான போக்கில் இருக்காது. இந்த முறை, தலால் ஸ்ட்ரீட் கணித்ததை இத்துறை பங்குகளின் முடிவுகள் மாற்றிக் காட்டியுள்ளன.

வரும் 2024-2025ம் நிதியாண்டில் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை வெகுவாகக் குறைக்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, நிச்சயமாக உலகப் பங்குச் சந்தைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், வரும் நிதியாண்டு முதலீட்டுக்கு உகந்த காலமாக கருதலாம். கடந்த வாரம் ஐடி துறைகள் 4 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. நிப்டி ரியால்டி துறைகள் ஒரு சதவீதம் உயர்ந்தன. எனினும், எப்எம்சிஜி துறைகளின் பங்குகள் மதிப்பு 2 சதவீதம் வரை சரிந்தது முதலீட்டாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

வரும் வாரம் எப்படி இருக்கும்? வரும் வாரத்தின் (ஜன.15 - 19) சந்தையின் போக்குகளை நாட்டின் மொத்த விலை பணவீக்கம் குறித்த தரவுகள் மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெச்டிஎப்சி வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற முக்கிய வங்கிகளின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டு முடிவுகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. வங்கித்துறை பங்குகளின் காலாண்டு முடிவுகளும் சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும். பேங்க் நிப்டி குறியீட்டைப் பொறுத்தவரை 48000 மற்றும் 48200 மண்டலங்களுக்கு மேல் செல்லக்கூடும் என பிரபுதாஸ் லீலாதர் பங்குத்தரகு நிறுவனம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT