Skip to main content

தொடர் சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை! நிப்டி 17503 புள்ளிகளில் நிறைவு!! 

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

Stock market recovers from series collapse Nifty closed at 17503 points !!

 

கடந்த நான்கு நாட்களாக சரிவு கண்டிருந்த இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை (நவ. 23) ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன. 

 

ஐடி, உலோகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தில் பங்குகளை விற்க ஆரம்பித்தது உள்ளிட்ட காரணங்களால் கடந்த நான்கு நாட்களாக இந்தியப் பங்குச்சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்பட்டது. வாரத்தின் முதல் நாளான திங்களன்றும் (நவ. 22) இந்தியப் பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சி கண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமையும் லேசான சரிவுடன் தொடங்கியது.

 

சிறிது நேரத்தில் சந்தைகள் மெதுவாக ஏற்றம் காணத் தொடங்கின. வர்த்தகத்தின் இறுதியில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 198.44 புள்ளிகள் (0.34%) அதிகரித்து, 58664.33 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 86.80 புள்ளிகள் (0.50%) அதிகரித்து, 17503.30 புள்ளிகளில் முடிவடைந்தது.

 

உலோகம், பொதுத்துறை, எரிசக்தி, பார்மா துறைகளில் ஏற்பட்ட எழுச்சி மட்டுமின்றி இதர மிட்கேப், ஸ்மால் கேப் பங்குகளும் லேசான உயர்வடையத் தொடங்கியதன் காரணமாக பங்குச்சந்தைகளில் வர்த்தகம் படிப்படியாக ஏற்றம் பெற்றன.

 

''எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளில் தொடர்ந்து நிலையற்றதன்மை காணப்பட்டாலும், அமெரிக்க அரசு கையிருப்பில் உள்ள எண்ணெய்யை அவசர காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கொள்கை முடிவு எடுத்திருப்பதன் மூலம் கச்சா எண்ணெய் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதும் அமெரிக்க பங்குசந்தைகள் சரிவில் இருந்து மீண்டெழ முக்கிய காரணம். அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. தொலைத்தொடர்புத்துறையில் ஏற்பட்டுள்ள கட்டண உயர்வு, அதை லாப பாதைக்குக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது'' என்கிறார் ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் வினோத் நாயர். 

 

மும்பை பங்குச்சந்தையில் மிட்கேப் பங்குகள் 1.6 சதவீதமும், ஸ்மால்கேப் பங்குகள் 1.8 சதவீதமும் ஏற்றம் கண்டுள்ளன. 

 

தேசிய பங்குச்சந்தையில் ஜே.எஸ்.டபுள்யூ, கோல் இண்டியா, பவர் கிரிட் கார்ப்பரேஷன், என்.டி.பி.சி, டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் கணிசமான லாபத்தைக் கொடுத்துள்ளன. அதேநேரம், இண்டஸ்இந்த், ஏஷியன் பெயிண்ட்ஸ், இன்போசிஸ், பஜாஜ் ஆட்டோ, விப்ரோ ஆகிய பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. 

 

துறை வாரியாகச் சொல்ல வேண்டுமானால் உலோகத்துறை 3.3 சதவீதமும், பார்மா துறை, எரிசக்தி, பொதுத்துறைகள் குறியீட்டெண் 1 முதல் 2 சதவீதமும் ஏற்றம் கண்டுள்ளன.  

 

 

சார்ந்த செய்திகள்