ADVERTISEMENT

அம்பானி வீட்டருகே வெடிகுண்டு கார்: பரபரப்பு திருப்பம் - களமிறங்கும் என்.ஐ.ஏ

03:16 PM Mar 08, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானி, மும்பையின் கம்பல்லா ஹில் பகுதியில் ஆன்டிலியா என்று அழைக்கப்படும் ஆடம்பரமான இல்லத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே, சந்தேகத்துக்கு இடமான கார் ஒன்று நின்றது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அந்தக் காரை சோதனையிட்டனர். அப்போது அந்தக் காரில் 20 கிலோ ஜெலட்டின் குச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காரிலிருந்து கடிதம் ஒன்றும், சில நம்பர் பிளேட்டுகளும் கைப்பற்றப்பட்டது. இந்த நம்பர் பிளேட்டில் ஒன்று, முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு வாகனத்தின் நம்பர் பிளேட்டோடு ஒத்துப்போவதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில், பிப்ரவரி 25ஆம் தேதி இரவு ஒருமணிக்கு இரண்டு கார்கள் அப்பகுதிக்கு வருவதும், ஒருவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே ஒரு காரை நிறுத்திவிட்டு, இன்னொரு காரில் ஏறிச் செல்வதும் பதிவாகியிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர், அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் உரிமையாளரைக் கண்டுபிடித்தனர். மன்சுக் ஹிரென் என்ற அந்த உரிமையாளர், தனது கார் முன்னரே காணாமல் போய்விட்டதாகக் கூறியுள்ளார். மேலும், அவர் கார் காணாமல் போனது குறித்து புகாரளித்திருப்பதும் தெரியவந்தது. இந்தநிலையில் கடந்த ஐந்தாம் தேதி, மன்சுக் ஹிரென் தானேவில் உள்ள கல்வா கால்வாய்ப் பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் அந்தக் கால்வாயில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் மும்பை காவல்துறை ஆணையர் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்தார். மேலும், மன்சுக் ஹிரென் மரணம் குறித்து தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என மஹாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே பரபரப்பு திருப்பமாக, தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட மன்சுக் ஹிரென் மரணம் குறித்து மஹாராஷ்ட்ரா பயங்கரவாத தடுப்புப் படை, கொலை, கிரிமினல் சதி மற்றும் ஆதாரங்களை அழிக்க முயற்சி என நேற்று (07.03.2021) வழக்குப் பதிவுசெய்தது. இந்தநிலையில் அம்பானி வீட்டின் அருகே நின்ற காரிலிருந்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. தேசியப் புலனாய்வு முகமை இதுகுறித்து மறுவழக்குப் பதிவுசெய்து விசாரிக்கவுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT