ADVERTISEMENT

பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட அப்பாவிகள்... AFSPA சட்டத்தை திரும்ப பெற வலுக்கும் கோரிக்கை!

03:30 PM Dec 06, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஓட்டிங் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை (04.12.2021) இரவு, தீவிரவாதிகள் என நினைத்து அப்பாவி இளைஞர்கள் மீது பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில், ஒரு பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அதேநேரத்தில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்டத்திலான சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என நாகாலாந்து முதல்வர் அறிவித்துள்ளார்.

அதேநேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள நாகாலாந்து காவல்துறை, 'பாதுகாப்புப் படையினரின் நோக்கம் பொதுமக்களைக் கொலை செய்வதும் காயப்படுத்துவதுமே என்பது வெளிப்படை' என தனது முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளது. இந்தநிலையில், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, "நான் மத்திய உள்துறை அமைச்சரிடம் பேசினேன். அவர் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளோம். நாகாலாந்திலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்குமாறு மத்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்தச் சட்டம் நம் நாட்டின் பிம்பத்தைக் கெடுத்துவிட்டது" எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் சங்மா, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையைத் தனிப்பட்ட முறையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கொண்டு செல்லப்போவதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல் நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டம் ஒழுங்கை மீறுவதாக தாங்கள் கருதும் நபர்கள் மீது முன் அனுமதியின்றி தாக்குதல் நடத்தும் அதிகாரத்தைப் பாதுகாப்புப் படைகளுக்கு இச்சட்டம் வழங்குகிறது. இந்தச் சட்டம் நாகாலாந்து, அசாம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் அமலில் இருந்துவருகிறது. இந்தச் சட்டத்தை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையும், பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் பல ஆண்டுகளாக வலியுறுத்திவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT