Nagaland Governor L. Ganesan criticized Rs.Bharathi

Advertisment

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆர்.எஸ். பாரதிக்கு கண்டனம் தெரிவித்ததையடுத்து நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது, “ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுமென்றே தமிழக அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். நாம் அனுப்பும் மசோதாக்களுக்கு கையெழுத்து போடக்கூடாது என்ற முடிவில் இருக்கிறார். நாகலாந்திலே ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? அவரை ஊரை விட்டே விரட்டியடித்தனர்.

நான் சொல்வதை தவறாக நினைக்கக் கூடாது. நாகலாந்து மக்கள் நாய் கறி உண்பார்கள். நாய் கறி சாப்பிடுபவர்களே, இவ்வளவு சொரணை இருந்து இந்த ஆளுநரை விரட்டியடித்தார்கள். அப்படி என்றால், உப்பு போட்டு சோறு சாப்பிடும் தமிழர்களுக்கு எந்தளவுக்கு சொரணை இருக்கும் என்பதை ஆளுநர் எண்ணி பார்க்க வேண்டும்” என்று பேசினார். இந்த நிலையில், ஆர்.எஸ். பாரதியின் பேச்சுக்கு நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு நாட்டின் கலாச்சாரத்தை சிதைக்கும் வகையில் உள்ளது. உணவு பழக்கத்தை வைத்து நாகலாந்து மக்களை கொச்சைப்படுத்தக்கூடாது. சாப்பிடும் பழக்கம் அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதை வைத்து அவர்களின் குணாதிசயத்தை முடிவு பண்ணக்கூடாது. ஒட்டுமொத்த நாகலாந்து மக்களையும் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் போல் சித்தரிப்பதா?. நாகலாந்து மக்களுக்கும், தமிழக மக்களுக்குமான இணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.