ADVERTISEMENT

பங்குச் சந்தையைத் தாக்கிய இந்தியா- சீனா எல்லைத் தகராறு! ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகம்!!

08:11 AM Jun 17, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


பங்குச்சந்தை ஆய்வாளர்கள் கணித்தபடியே, செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) தேசிய பங்குச்சந்தையான நிப்டியில் வர்த்தகம் தொடங்கியபோது, 10,000 புள்ளிகளைக் கடந்தது. இதனால் முதலீட்டாளர்களிடையே புத்துணர்ச்சி ஏற்பட்டாலும், அந்த மகிழ்ச்சி அடுத்த மூன்று மணி நேரம் கூட தாக்குப்பிடிக்கவில்லை. எல்லையில் இந்தியா- சீனா ராணுவத்தினர் குவிப்பால் பதற்றம் ஏற்பட்டது. இது, இந்தியப் பங்குச்சந்தைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

அடுத்த இரண்டு மணி நேரத்தில் நிப்டி 9,728.50 புள்ளிகள் வரை சர்ரென்று சரிந்தது. இந்திய வீரர்கள் மூவர் மரணம் அடைந்த செய்தி வெளியானதால், முதலீட்டாளர்கள் லாப நோக்கில் தங்களிடம் இருந்த பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர். ஒருகட்டத்தில் வாங்குவோரைக் காட்டிலும் பங்குகளை விற்போர் மூன்று மடங்குக்கும் மேல் அதிகரித்தனர்.

எல்லை விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம் என்று சீனா கூறியதுடன், எல்லையில் இருந்து இரு நாட்டுப் படைகளும் திரும்ப அழைக்கப்பட்டன. இதனால் ஓரளவு பதற்றம் தணிந்தது. பின்னர் வர்த்தக நேரம் முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இருந்து நிப்டி இண்டெக்ஸ் மீண்டும் படிப்படியாக உயர்ந்தது. வர்த்தக நேர முடிவில், 9,914 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது, திங்கள் கிழமை வர்த்தகப் புள்ளிகளைக் காட்டிலும் 100.30 புள்ளிகள் உயர்வு ஆகும்.


நிப்டியில் ஹெச்.டி.எப்.சி. வங்கிப் பங்குகள் நேற்று 4.14 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. ஹெச்.டி.எப்.சி. பங்குகள் 3.90 சதவீதம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிப் பங்குகள் 3.41 சதவீதம், ஜிண்டால் ஸ்டீல் 2.86 சதவீதம், ஹிண்டால்கோ பங்குகள் 2.78 சதவீதம் வரை விலை உயர்ந்தன. டாடா மோட்டார்ஸ் அதிகபட்சமாக 5.87 சதவீதம் வரை சரிந்தன. இன்பிராடெல், இண்டஸ் இந்த் வங்கி, டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி பங்குகளும் லேசான சரிவைச் சந்தித்தன. மொத்தத்தில் நேற்றைய வர்த்தகத்தில் 24 பங்குகள் ஏற்றத்திலும், 26 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகம் ஆயின.

மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ், திங்களன்று 33,228 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்து இருந்தது. நேற்று (ஜூன் 16) சென்செக்ஸின் துவக்கமே 33,853 புள்ளிகளில் தொடங்கி, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை அளித்தது. இந்தியா- சீனா நாடுகளிடையேயான பதற்றம், சென்செக்ஸிலும் எதிரொலித்தது.

ஒரு கட்டத்தில், 34,022 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ், பின்னர் மதியம் 1.15 மணியளவில் 32,953 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்தது. இறுதியில் 33,605.22 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இது, முந்தைய வர்த்தக புள்ளிகளைவிட 376 புள்ளிகள் உயர்வு என்பதால், முதலீட்டாளர்களிடையே நேர்மறையான நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. சென்செக்ஸில் 15 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 15 நிறுவனப் பங்குகளின் மதிப்புகள் இறக்கத்திலும் வர்த்தகம் ஆயின.

புதன்கிழமை வர்த்தகத்தில் கவனிக்க வேண்டியவை:

நிப்டி 9,728 புள்ளிகளாகச் சரிந்து, பின்னர் ஏற்றம் கண்டிருப்பது என்பது நிப்டியில் காளையின் ஆதிக்கம் தொடரும் என்பதையே காட்டுகிறது என்கிறார்கள், நிபுணர்கள். ஹெச்.டி.எப்.சி. செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தீபக் ஜசானி, நேற்றைய வர்த்தகத்தில் இண்டெக்ஸ் 9,720 புள்ளிகளாகச் சரிந்தாலும்கூட, கடைசி இரண்டு அமர்வுகளில் படிப்படியாக ஏற்றம் கண்டுள்ளது. இது, நிப்டி வலுவான நிலையில் இருப்பதைக் காட்டுகிறது என்கிறார்.

ரேலிகர் பங்குத்தரகு நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர் அஜித் மிஸ்ரா, நிப்டி இண்டெக்ஸ் ஒரு கட்டத்தில், 10,050 புள்ளிகள் வரை உயர்ந்தது, பங்குகள் வரும் காலத்தில் ஆதாயம் தரும் என்ற நம்பிக்கை அளிக்கக் கூடியதாகும். அதேநேரம், உலக பங்குச்சந்தைகளின் கள நிலவரமும் இந்தியப் பங்குச்சந்தைகளில் அவ்வப்போது எதிரொலிக்கும்,'' என்றார்.


கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் கட்ட அலையால், அமெரிக்க பங்குச்சந்தைகள் கடந்த சில நாள்களாக தொடர்ந்து சரிவு கண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கணிசமான ஏற்றம் கண்டது. ஜெனரிக் மருந்துகள் மூலம் கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்ற தகவல் பரவியதால், முதலீட்டாளர்களிடையே சந்தை மீது ஆர்வம் அதிகரித்ததால், முதலீடுகளைக் கொட்டினர். இதனால் அமெரிக்க பங்குச்சந்தைகள் 759.62 புள்ளிகள் வரை (2.95 சதவீதம்) உயர்ந்துள்ளது. அமெரிக்க சந்தைகள் ஏற்றம் பெற்றதன் எதிரொலியாக, ஐரோப்பிய பங்குச்சந்தைகளிலும் 2.7 சதவீதம் வரை முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்தியா- சீனா எல்லை தகராறு, அமெரிக்க சந்தைகளில் நிலவும் ஏற்ற, இறக்கம் காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகளிலும் இம்மாதம் முழுவதும் நிலையற்ற தன்மை காணப்படும் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள். என்றாலும், குறிப்பிட்ட சில பங்குகளில் காளையின் ஆதிக்கம் தொடரும் என்றும் கணித்திருக்கிறார்கள்.


அதன்படி, பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், பாலாஜி அமின்ஸ், கிரி இண்டஸ்ட்ரீஸ், பாரத் டைனமிக்ஸ், லூமாக்ஸ் ஆட்டோ டெக்னாலஜிஸ், பாலாஜி டெலிபிலிம், நியூலேண்ட் லேபரட்டரீஸ், பேயர் கிராப்சயின்ஸ், சவுத் வெஸ்ட் பின்னாக்கிள், 3எம் இண்டியா ஆகிய பங்குகள் ஆதாயம் தரக்கூடியவை என்கிறார்கள்.


சரிவில் உள்ள பங்குகள்:


புதன்கிழமை வர்த்தகத்தின்போது, பின்வரும் பங்குகள் சரிவைச் சந்திக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அவை...


டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், எல் அண்டு டி, டெக் மஹிந்திரா, கிளென்மார்க் பார்மா, டாடா ஸ்டீல் பிஎஸ்எல், நோசில் லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஜினியர்ஸ் இண்டியா, எஸ்ஜேவிஎன் லிமிடெட், கேஸ்ட்ரால் இண்டியா, டோரண்ட் பவர், சிட்டி யூனியன் வங்கி, ஹெச்டிஎப்சி ஏஎம்சி, ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஹிந்துஸ்தான் மோட்டார், டேக் சொல்யூஷன்ஸ், டிரெண்ட், எஸ்ஆர்எப், ஜேகே லட்சுமி சிமெண்ட், மிர்ஸா இண்டர்நேஷனல், டிசிஎம் ஸ்ரீராம், சுதர்சன் கெமிக்கல்ஸ் மற்றும் பால்மெர் லாரீ ஆகிய பங்குகள் சரிவைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.


எந்தப் பங்குகளை வாங்கலாம்?:


காவேரி சீட், டாடா கம்யூனிகேஷன்ஸ், எம்.ஓ.ஐ.எல்., தானுகா அக்ரி மற்றும் ரேலீஸ் இண்டியாக ஆகிய பங்குகள், கடந்த 52 வார உச்ச நிலையை அடைந்துள்ளன. அதனால் இப்பங்குகள் அனைத்தும் மேலும் விலை உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் உள்ளதால், இன்றைய வர்த்தகத்திலும் இவற்றுக்குக் கணிசமான வரவேற்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT