ADVERTISEMENT

“8 நாள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை” - எம்.பி. டேனிஷ் அலி வேதனை

06:17 PM Sep 29, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் சந்திரயான் 3 வெற்றி குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் சந்திரயான் 3 வெற்றி குறித்துப் பேசினர். இதில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி பேசினார். அப்போது பாஜக எம்.பி.யான ரமேஷ் பிதுரி, டேனிஷ் அலியைப் பார்த்து ‘இஸ்லாமிய தீவிரவாதி' என்றும் 'பயங்கரவாதி' என்றும் அவதூறாகப் பேசினார். இதற்கு நாடாளுமன்றத்தின் உள்ளே கடும் கண்டனங்கள் எழுந்தன. அதேபோல், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ரமேஷ் பிதுரிக்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்து வந்தன.

டேனிஷ் அலியை குறிவைத்து அவதூறாகப் பேசிய பா.ஜ.க. எம்.பி ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையிலேயே கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர், ரமேஷ் பிதுரிக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும், “இத்தகைய நடத்தை தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ரமேஷ் பிதுரி பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எம்.பி.டேனிஷ் அலி கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டேனிஷ் அலி, “நாடாளுமன்றத்தில் அந்த சம்பவம் நடந்து எட்டு நாள் ஆகிவிட்டது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் 1 வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. எட்டு நாள் ஆகியும் ரமேஷ் பிதுரி மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களவைத் தலைவர் பிரதமர் மோடிக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளேன். மக்களவைத் தலைவராக இருப்பதால் பிரதமர் மோடிக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது என நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தின் பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக எம்.பி. ரமேஷ் பிதுரியை பா.ஜ.க நியமித்திருந்தது. அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT