Skip to main content

பங்கேற்ற கங்கனா; அழைக்கப்படாத குடியரசுத் தலைவர்! கேள்வி எழுப்பிய எம்.பி.

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Derek O. Brien on why Draupadi Murmu was not invited  new parliamentary session

 

திங்கட்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வு வழக்கம்போல் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில்  நடைபெற்றது. அப்போது 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிர்ந்துகொண்டனர். 

 

இதனைத் தொடர்ந்து கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான நேற்று (18 ஆம் தேதி) ஏற்கனவே அறிவித்தபடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. விரைவில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது இதற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தரும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். 

 

இந்த நிலையில் நேற்று கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பழைய கட்டிடத்திற்கு விடைகொடுத்துவிட்டு, ஒன்றாக புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்றனர். இது தொடர்பான விழா துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கும் ஏன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்கவில்லை என்ற கேள்வியை தற்போது எதிர்க்கட்சியினர் எழுப்பி வருகின்றனர். 

 

ஏற்கனவே கடந்த மே மாதம் நடந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்காமல், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரதமர் மோடியே கட்டிடத்தை திறந்து வைத்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பழங்குடியினர் என்பதாலேயே பாஜக தலைமையிலான மத்தியரசு அவருக்கு அழைப்பு கூட விடுக்காமல் இருந்தது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர். இந்த நிலையில்தான் நேற்று பிரதமர், துணை குடியரசுதலைவர், மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் அனைவரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு செல்லும் நிகழ்வு நடந்தது. 

 

இந்த  நிகழ்விற்கு ஏன் குடியரசு தலைவர் அழைக்கப்படவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.டெரிக் ஓ.பிரைன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எங்கே இருந்தார்? ஏன் அவர் புறக்கணிக்கப்பட்டார்? அவர் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டாரா? எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டதையொட்டி கங்கனா, ஈஷா குப்தா உள்ளிட்ட பாலிவுட் நடிகைகள் புதிய நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்