ADVERTISEMENT

“ஜின்னாவை கொல்ல முயன்றது பற்றியெல்லாம் பேசியிருக்கிறார்...” - செங்கோல் விவகாரத்தில் இந்து என். ராம்

01:26 PM May 31, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘1947 ஆகஸ்ட் 15ல் நடந்தது என்ன?’ எனும் தலைப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இன்று செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினர். இதில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் கலந்துகொண்டு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், “செங்கோல் விவகாரத்தில் பல கட்டுக்கதைகள் அரசியலில் வந்துள்ளன. உண்மைகள் என்ன என்று தெரிய வேண்டும். எது நடக்கவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

சுதந்திரம் இந்தியாவிற்கு கொடுக்கும் நிகழ்வை எப்படி நடத்தலாம் என மவுண்ட்பேட்டன், நேருவிடம் கேட்டதாக பாஜக சொல்கிறது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மவுண்ட்பேட்டனை பற்றி பலர் ஆய்வு செய்துள்ளனர். எதிலும் இது குறிப்பிடப்படவில்லை. மவுண்ட்பேட்டன் இருந்த இந்தியா குடியரசாக ஆகவில்லை. வைஸ்ராய் என்றால் மன்னரின் பிரதிநிதி. அவர் கவர்னராக ஆகும்போது அனைத்தும் மாறும். எனவே மவுண்ட்பேட்டன் நேருவிடம் கேட்டதாக எந்த ஆதாரமும் இல்லை. மவுண்ட்பேட்டன் 1968 ஆம் ஆண்டு கல்லூரி ஒன்றில் உரையாற்றினார். அந்த உரையில், நேருவிடம் இப்படி கேட்டது செங்கோல் என எந்த ஒரு வார்த்தைகளும் இல்லை. ஜின்னாவை கொல்ல முயற்சித்தது குறித்தெல்லாம் பேசுகிறார். ஆனால் செங்கோல் குறித்து ஒன்றும் பேசவில்லை. இவை அனைத்தும் கட்டுக்கதை. ஆதீனங்கள் நேருவைப் பார்த்தது உண்மை. அதற்கு ஆதாரங்களும் உள்ளது. ஆனால் அவர்கள் கதையில், மவுண்ட்பேட்டன் நேருவை கேட்டபோது ராஜாஜியிடம் பேசினார் என்றும் ராஜாஜி திருவாவடுதுறை ஆதீனத்திடம் பேசியது செங்கோல் தயாரிக்க சொன்னது அது பற்றியெல்லாம் அரசு இணையத்தில் உள்ளது.

ஆனால் செங்கோல் எப்போது கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்? அதற்கும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்றால் இல்லை. ஆட்சி மாற்றத்தினை குறிப்பிடுவது, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய சுதந்திரச் சட்டம் தான். நேருவை இந்தியாவின் பிரதமராக வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் முன்மொழிந்த உடன் இந்தியா சுதந்திர நாடாக மாறியது. அடுத்த நிமிடமே அப்படி நடந்தது. இதுவே நடந்தது. ஆகஸ்ட் 14, 1947ல் காலை 8 மணிக்கு கராச்சிக்கு செல்கிறார் என்றும் 7 மணிக்கு மீண்டும் விமானத்தில் இந்தியா திரும்புவார் என்றுதான் மவுண்ட்பேட்டனின் அன்றைய நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிடப்பட்டிருப்பது போல் அல்லாமல் 13 ஆம் தேதியே மவுண்ட்பேட்டன் கராச்சி செல்கிறார். எனவே ஆதினங்கள் மவுண்ட்பேட்டனை பார்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆதினங்களுக்காக சிறப்பு விமானம் ஏற்பாடு செய்தார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அன்றைய இந்து நாளிதழில் ஆகஸ்ட் 29, 1947 அன்று ஆதினம் விளம்பரம் கொடுத்துள்ளனர். அதில் திருவாவடுதுறை ஆதீனங்கள் சார்பில் நேருவுக்கு செங்கோல் கொடுத்ததாக 3 புகைப்படங்கள் உள்ளது.

அதன்படி 14 ஆகஸ்ட் 1947 அன்று இரவு 10 மணிக்கு நேருவின் இல்லத்தில் வைத்து செங்கோல் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. விமானத்தில் போகவில்லை. ஆகஸ்ட் 11 ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியதாக கூறியுள்ளனர். அதில் குமாரசாமி தம்பிரான், மாணிக்கம் ஓதுவார், ராமலிங்கம் பிள்ளை, சுப்பையா பாரதியார், ஆதீனம் வித்துவான் டி.என். ராஜரத்தினம் பிள்ளை ஆகியோர் சென்றதாக புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது” எனக் கூறினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, கம்யூனிஸ்ட் கட்சி ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT