ADVERTISEMENT

உயிரை எண்ணி அஞ்சுகிறேன்! - அமித்ஷாவுக்கு மெஹபூபா முப்தி மகள் கடிதம்

03:59 PM Aug 16, 2019 | kirubahar@nakk…

காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தியின் மகள், இல்திஜா ஜாவீத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்… “சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகளான தன்னை எதற்காக வீட்டுச் சிறையில் வைத்துள்ளீர்கள்” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

“உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகளுக்கு தான் அனுபவிக்கும் அடக்குமுறைகளைப் பற்றிப் பேசும் உரிமையில்லையா?” என தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியிருக்கும் இல்திஜா, மீடியாவைச் சந்தித்துப் பேசினால், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டப்படுவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இல்திஜா ஜாவீத், பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள தனது வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் அமித்ஷாவிற்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “இன்று இந்தியாவின் இன்னபிற பகுதிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், காஷ்மீரிகள் மட்டும் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்ட விலங்குகளைப் போல தவிக்கிறோம். ஒரு உண்மையை மீடியா முன்னதாக பேசியதற்காக, என்னை போர்க்குற்றவாளியைப் போல இங்கே நடத்துகிறார்கள்.

தொடர்ச்சியான கண்காணிப்பில் என்னை வைத்திருக்கிறார்கள். என்னைச் சந்திக்க உறவினர்களைக் கூட அனுமதிக்க மறுக்கிறார்கள். என் வாழ்வை எண்ணி அஞ்சிக் கொண்டிருக்கிறேன். நிறைய காஷ்மீரிகளின் நிலை இங்கு அதுதான்” என எழுதியுள்ளார்.

முன்னதாக, தனது தாயார் மெஹபூபா முப்தி கவர்னரின் அதிகாரத்தால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உயிருக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்றும் மீடியாவைச் சந்தித்து இல்திஜா பேசியிருந்தார்.

காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT