ADVERTISEMENT

சர்ச்சை தீர்ப்பை திரும்ப பெற்ற மணீப்பூர் நீதிமன்றம்; குண்டுவெடிப்பால் மீண்டும் பதற்றம்!

12:29 PM Feb 24, 2024 | mathi23

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து மைத்தேயி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மணிப்பூர் அரசுக்கு கடந்தாண்டு மணிப்பூர் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

ADVERTISEMENT

இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.

ADVERTISEMENT

இதனையடுத்து, மைத்தேயி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை கடந்த 22ஆம் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. அதாவது பழங்குடியின பட்டியலில் மைத்தேயி சமூகத்தினரை இணைக்க மாநில அரசுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த அறிவுறுத்தலை நீக்கம் செய்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களே மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மணிப்பூரின் தனமஞ்சூரி எனும் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (23-02-24) இரவு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த வெடிகுண்டு சம்பவத்தால், சம்பவ இடத்திலேயே மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கலவரத்துக்கு காரணமாக அமைந்த தீர்ப்பை, நீதிமன்றம் திரும்பப் பெற்ற அடுத்த நாளிலேயே நடந்த இந்த வெடிகுண்டு சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT