
மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜகஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில், இருதரப்புக்கும் இடையேயான கலவரமாக மாறியது. இதனால் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் இந்தக் கலவரத்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள ஒன்றிய அமைச்சர் ரஞ்சன் சிங்கின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறை விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி ஒன்றிய அமைச்சர் வீட்டின்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பைஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் மணிப்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் அமைதிப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். பேரணியில் நிர்ணயிக்கப்பட்ட எல்லையைத் தாண்டிபேரணி சென்ற மாணவர்கள் மீது மணிப்பூர் போலீசார் கண்ணீர் குண்டு வீசி உள்ளனர். கடந்த மே 3 ஆம் மூன்றாம் தேதியில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள இன்டர்நெட் வசதியை மீண்டும் வழங்கக் கோரி மாணவர்கள் தங்களது வலியுறுத்தல்களைப் பேரணி மூலம் தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)