ADVERTISEMENT

கேரளா முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் மர்ம மரணம்

04:12 PM Sep 19, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரளா மாநிலம் கொச்சி களமசேரி பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ்பாபு (47). சமூக சேவகரான இவர், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிரான ஊழல் மற்றும் பொதுநலன் வழக்குகளைத் தொடர்ந்து அதை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன் தினம் கிரீஷ்பாபு வழக்கம் போல் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இவருடைய மனைவி வேறு ஒரு அறையில் தூங்கினார். அடுத்த நாள் காலை வெகு நேரமாகியும் கிரீஷ்பாபு தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் கிரீஷ்பாபுவின் மனைவி, கணவருடைய அறைக் கதவைப் பலமுறை தட்டிப் பார்த்துள்ளார்.ஆனால், அவர் கதவைத் திறக்கவில்லை.

இதனால், சந்தேகமடைந்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்துப் பார்த்துள்ளார். அங்கு கிரீஷ்பாபு படுக்கையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து களமசேரி காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த கிரீஷ்பாபுவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், அவருடைய மகள் வீணா விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, முஸ்லீம் லீக் தலைவர் குஞ்ஞாலிக் குட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கேரளாவைச் சேர்ந்த தாது மணல் நிறுவனத்திடமிருந்து பணம் வாங்கியதாகப் புகார் எழுந்தது. அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் இந்த விவகாரம் வெளியே வந்தது.

இது குறித்து விசாரணை நடத்தக் கோரி கிரீஷ்பாபு மூவாற்றுபுழா லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, அதை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிரீஷ்பாபு இறந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டது. பினராயி விஜயன், அவரது மகள் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபர் மர்மமான முறையில் இறந்தது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT