ADVERTISEMENT

கூண்டோடு சுற்றுலா சென்ற வருவாய்த் துறையினர்; முதல்வர் வரை சென்ற விஷயம் 

04:01 PM Feb 25, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கேரளாவின் பத்தனம் திட்டா மாவட்டத்தின் கோனி நகரின் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வழக்கமாக அப்பகுதியின் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் தங்களுக்கான கோரிக்கைகள் மற்றும் வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெறுவது போன்றவைகளுக்காக சென்றிருக்கிறார்கள். காலை பதினோரு மணி கடந்தும் அலுவலகத்திற்கு எந்த அதிகாரிகளும் வரவே இல்லையாம். அலுவலகத்தின் அத்தனை சேர்களும் காற்று வாங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போன மக்கள், வந்திருந்த மூன்று அலுவலர்களிடம் தங்களின் கோரிக்கைகள் மற்றும் அதிகாரிகளைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள். அவர்களிடம் முறையான விளக்கமளிக்காத அந்த அலுவலர்கள், போயிட்டு திங்கட்கிழமை வாங்க. அதிகாரிங்க வருவாங்க என்றிருக்கிறார்கள்.

இதனால் அதிர்ந்து போன மக்கள் கோனி தொகுதியின் சி.பி.எம். எம்.எல்.ஏ.வான ஜெனிஷ் என்பவரைத் தொடர்பு கொண்டு, "தாலுகா அலுவலகம் வந்த நாங்கள் ரொம்ப நேரம் காத்திருந்தும் மொத்த அதிகாரிகளும் இந்தக் கணம் வரை வரல. இருந்த மூணு பேர்ட்ட கேட்டப்ப, ஆபீஸர்கல்லாம் டூர் போயிருக்காங்க. போயிட்டு திங்கட்கிழமை வாங்கன்னு சொல்றாங்க. அலையவுடுறாங்க" என்று புகார் தெரிவித்திருக்கிறார்கள். மக்களின் புகாரால் அதிர்ந்த எம்.எல்.ஏ ஜெனிஷ், சற்றும் தாமதிக்காமல் வட்டாட்சியர் அலுவலகம் வந்திருக்கிறார். வந்தவருக்கு ஷாக். ஒட்டுமொத்த அலுவலகமும் வெறிச்சோடி கிடக்க, வந்திருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கும்போது, சோர்ந்து போயிருந்த நடக்க முடியாத மாற்றுத் திறனாளியான ஒருவர் தன்னுடைய மனுவை எம்.எல்.ஏ.விடம் அளித்திருக்கிறார்.

வெள்ளிக்கிழமை. அலுவலகம் பரபரப்பாக செயல்பட வேண்டிய பொழுதில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சீட்டில் இல்லை. ஆத்திரமான எம்.எல்.ஏ. விசாரித்திருக்கிறார். 10, 11, 12 தேதியான வெள்ளி, சனி, இரண்டு நாட்கள் ஒட்டுமொத்த அலுவலக அதிகாரிகளும் விடுப்பு போட்டுவிட்டு ஞாயிறோடு மூன்று நாட்கள் குடும்பத்துடன் ஜாலியாக சொகுசு பேருந்தில் மூணார் டூர் போனது தெரிய வந்திருக்கிறது. அவர்களின் ஜாலி டூரின் அத்தனை செலவுகள் போக்குவரத்து உட்பட மொத்தச் செலவையும் அந்தப் பகுதியின் குவாரி அதிபர் ஏற்றுக் கொண்டிருப்பதையும் அறிந்த எம்.எல்.ஏ. ஆடிப் போனாராம்.

மொத்தமாக மூன்று நாள் ஜாலி டூர். மக்களோ மனுக்களோடு காத்துக் கிடப்பு. மருத்துவ விடுப்பும் வழக்கமான ஒப்பில்லாத காரணங்களைக் குறிப்பிட்டும் எனப் பலவகையான வழிகளில் அத்தனை ஆபீஸர்களும் விடுப்புக்குக் காரணம் தெரிவித்திருப்பதை அலுவலக வருகைப் பதிவேடுகளை ஆராய்ந்து தெரிந்துகொண்ட எம்.எல்.ஏ., உடனடியாக நகரின் அடிஷனல் டிஸ்ட்ரிக் மாஜிஸ்திரேட்டை அலுவலகத்திற்கு வரவழைத்திருக்கிறார். விஷயம் பரபரப்பாக, நகரின் பத்திரிகையாளர்களும் அங்கே விரைந்திருக்கிறார்கள். வருகைப் பதிவேட்டை ஆராய்ந்த மாஜிஸ்திரேட்டும் அவர்களின் விடுப்பு மற்றும் மெடிக்கல் லீவு போட்டு விட்டு டூர் போனதையும் அரசுக்கு ரிப்போர்ட் செய்திருக்கிறார். இதற்குள் அதிகாரிகள் சொகுசு பேருந்தில் ஜாலியாக ஆட்டம், பாட்டத்துடன் சென்ற வீடியோ வைரலாகி அதிர்வலைகளை கிளப்ப, விஷயம் முதல்வர் பினராயி விஜயன் வரை போயிருக்கிறதாம்.

மக்களைக் காக்க வைத்துவிட்டு அதிகாரிகள் ஜாலி டூர் சென்றது முதல்வருக்கு கடுப்பைக் கிளப்ப, "ஒரு ஃபைல் என்று சொல்லக்கூடியது ஒரு ஆளோட வாழ்க்கை. அது தீர்வுக்காக உங்கள்ட்ட வருது. அனாவசியமா அத வைக்கக்கூடாது. அத சரி பண்ணிக் கொடுங்க பெண்டிங் வைச்சா ஊழல், கரப்ஷன் ஆகும். அப்ப அவன் வேதனைப்படுவான் அவனுக்கும் ஒரு காலம் வரும். இந்த அரசுனால ஒண்ணுமே நடக்காதுன்னு, இந்த அரசு மேல அவனோட நம்பிக்கை போயிடும். உங்ககிட்ட இருக்கிற ஒவ்வொரு ஃபைலும் ஒவ்வொரு மனுஷனோட வாழ்க்கை. அத உடனுக்குடன் சரி பண்ணிக் கொடுத்தா தான் அவனுக்கு இந்த அரசு மேல் நம்பிக்கை வரும்" என்று அதிகாரிகளுக்கு நைசாக... ஊசி ஏற்றிய பினராயி விஜயன் இது குறித்து விசாரணை அறிக்கையும் கேட்டிருக்கிறாராம்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய தொகுதி எம்.எல்.ஏ.வான ஜெனிஷ், "மக்களின் கோரிக்கைகள், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிற வேலையே அரசுப் பணியாளர்களுக்கு அரசு கொடுத்தது. ஆனால் இவர்கள் வெள்ளிக்கிழமையே லீவு போட்டுட்டுப் போயிட்டாங்க. அதனால இங்க வர்ற மக்களுக்கு கஷ்டமாப் போச்சு. அப்படி பண்ணக் கூடாது. அது தப்பு. அரசு வேலை என்பது சர்வீஸ். பிசினஸ் கிடையாது" என்று தனது கொதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதனிடையே இதுகுறித்து பத்தனம் திட்டா மாவட்ட ஆட்சியரான திவ்யா.எஸ்.ஐயர், “இவர்கள் முறைப்படியான விடுப்பு போட்டுள்ளனர். தப்பில்ல. மற்றபடி எம்.எல்.ஏ. சொன்ன திட்டங்கள், குற்றச்சாட்டுக்களை, நியாயங்களை அரசுதான் முடிவு பண்ணனும்” என்று அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளாராம். அதே சமயம், ஜாலி டூர் போன அதிகாரிகளோ அந்த எம்.எல்.ஏ. என்ன சொன்னாலும் நாங்க கேட்கமாட்டோம். நாங்க “லா” படிதான் போறோம் என்று சொல்லியுள்ளனர். ஆனாலும் புயலைக் கிளப்பிய இந்தச் சம்பவத்திற்கு அழுத்தமான ஃபுல் ஸ்டாப் விழும் என்கிறார்கள் அரசுத் தரப்பை அறிந்தவர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT