ADVERTISEMENT

"கேரளாவை போல் இருக்க வேண்டும் என்று கூறி இருக்க வேண்டும்" - அமித்ஷாவுக்கு பினராயி விஜயன் பதிலடி

06:03 PM Feb 14, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடகா மாநிலத்திற்கு வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா புத்தூர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், "கர்நாடகாவுக்கு அருகில் கேரளா உள்ளது. அது குறித்து மேலும் நான் கூற விரும்பவில்லை. கர்நாடகா பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அது பாஜகவினால் மட்டும் தான் முடியும். மோடி தலைமையிலான ஆட்சியினால் தான் முடியும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த ஆயிரத்து எழுநூறு கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், பிரதமர் மோடி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பையே நிரந்தரமாகவே தடை செய்துவிட்டார். தேச விரோத சக்திகளை வளர்க்கக்கூடிய கட்சி காங்கிரஸ். அவர்களால் ஒருபோதும் கர்நாடகாவுக்கு பாதுகாப்பு கிடையாது என்று பேசி இருந்தார்.

அமித்ஷாவின் இந்த பேச்சானது சர்ச்சையான நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடகாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போது கர்நாடகாவுக்கு அருகில் கேரளா இருக்கிறது என்றும், கர்நாடகாவை பாஜகவால் தான் தான் பாதுகாக்க முடியும் என்றும் பேசி இருந்தார். இதன் மூலம் அமித்ஷா என்ன சொல்ல வருகிறார்? கர்நாடகாவின் அண்டை மாநிலமாக கேரளா இருப்பதால் என்ன தவறு? கேரளாவில் அனைத்து மதத்தினரும் மட்டுமின்றி மத நம்பிக்கை இல்லாதவர்களும் அமைதியாக வாழ முடியும். ஆனால், கர்நாடக என்ன நிலையில் இருக்கிறது. மதக் கலவரங்கள் நிகழும் மாநிலமாக கர்நாடகா உள்ளது.

சிக்மகளூரில் நூற்றைம்பது ஆண்டுகள் பழமையான தேவாலயம் 2021 ஆம் ஆண்டு சங்பரிவார் அமைப்பால் தாக்கப்பட்டது. மேலும், கர்நாடகாவில் உள்ள சிறுபான்மையினர் சங்பரிவார் அமைப்புகளால் தாக்கப்படுகின்றனர். ஆனால், கேரளாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவதால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படுவதில்லை. இங்கு மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அமித்ஷா கர்நாடகாவில் பேசும்போது கேரளாவைப் போல் இருக்க வேண்டும் என்று கூறி இருக்க வேண்டும்" எனப் பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT