கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்உள்ள பலமாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வரும் பாஜக சார்பில், கர்நாடகாவில் சில மாதங்களுக்கு முன்பாகவே தேர்தல் வேலைகள் தொடங்கிவிட்டன. பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தற்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், இன்று கர்நாடக மாநிலம் தேவநாகரியில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா, ‘சமீபத்தில் ஓய்வுபெற்ற உச்சநீதிபதி ஒருவர் பேசுகையில், ஊழல் அரசுக்கான போட்டி வைத்தால் அதில் எடியூரப்பா அரசு முதலிடம் பிடிக்கும் எனக்கூறினார்’ எனப் பேசினார். அப்போது உடனிருந்தவர் அமித்ஷாவின் காதில் வாய்குளறி எடியூரப்பா என்று கூறியதை உணர்த்த, அமித்ஷா தன் கருத்தை உடனடியாக மாற்றிக்கொண்டார்.

அவர் விட்டாலும், காங்கிரஸ் கட்சியினர் அந்தக் கருத்தை விடுவதாக இல்லை. தொடர்ந்து அந்த வீடியோ காட்சியை சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். ‘பொய்களின் ஷா ஒருவழியாக உண்மை பேசிவிட்டார். மிக்க நன்றி அமித்ஷா’ என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா ஆட்சியமைத்திருந்த நிலையில், 2011ஆம் ஆண்டு அவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், அவர் பதவிவிலக வேண்டிய சூழல் உருவானது. பின்னர் 2016ஆம் ஆண்டு அவர் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.