ADVERTISEMENT

காஷ்மீர் மக்களின் சீற்றத்தை ராணுவ அடக்குமுறை அடக்கிவிடுமா?

05:14 PM Sep 04, 2019 | kirubahar@nakk…

பாகிஸ்தானின் ஆசைகாட்டுதலுக்கு ஆளாகாமல் காஷ்மீர் மக்களை தடுத்த ஒரே விஷயம் அவர்களுடைய சுயமரியாதைக்கும், தனித்தன்மைக்கும் உத்தரவாதம் அளித்த 370 ஆவது பிரிவுதான். ஆனால், இப்போது அதையும் மோடி அரசு பறித்திருப்பதால், அவர்கள் கொடூரமாக அவமானப்படுத்தப்பட்டிருப்பதாக நினைக்கிறார்கள் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் அல்பனா கிஷோர்.

இந்தியா பாகிஸ்தான் எல்லை அருகில் உள்ள முஸாபராபாத் நகரில் இருந்து ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற அமைப்பை இயக்கியவர் அமானுல்லா கான். அவரை 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அல்பனா பேட்டி கண்டார்.

அப்போது, அவர் ஒரு விஷயத்தை கூறினார். 1984 ஆம் ஆண்டு காஷ்மீர் விடுதலையை ஊக்குவிக்கும் வகையில் சிலரை அனுப்பியதாகவும், அவர்கள் காஷ்மீர் மக்களின் ஆதரவை பெற முடியவில்லை என்று திரும்பிவிட்டதாகவும், இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்த காஷ்மீர் மக்கள் தயாராக இல்லை என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

1984 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஆயுதங்களை எடுத்து போராட்டம் நடத்த விரும்பாத காஷ்மீர் மக்கள், பிறகு எப்படி இப்படி மாறினார்கள்?

ADVERTISEMENT

ADVERTISEMENT

காஷ்மீரில் ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை அடிக்கடி கவிழ்த்ததும், மத்திய அரசின் சொற்படி கேட்டு ஆடும் பொம்மை அரசுகளை தேர்தல் மூலம் உருவாக்குவதும்தான் மக்கள் வெறுப்புக்கு முக்கியமான காரணமாக இருந்தது. 1986 ஆம் ஆண்டு ஒரு அரசாங்கத்தை கவிழ்த்தார்கள். அனந்தநாக்கில் மத மோதல்களை உருவாக்கினார்கள். 1987 ஆம் ஆண்டு ஒரு மோசடித் தேர்தல் நடத்தினார்கள்.

அந்த மோசடித் தேர்தலும், அது நடத்தப்பட்ட வேகமும்தான் மக்கள் கோபத்திற்கு காரணமாகியது. அப்போது தொடங்கிய போராட்டம் 30 ஆண்டுகள் முடிந்தும் தொடர்கதையாக நீடிக்கிறது. ஆனாலும் அதிலிருந்து இந்திய அரசு சில பாடங்களைக் கற்றுக் கொண்டது. அதன்காரணமாக மக்கள் ஆவேசம் சற்று குறைந்தது.

காஷ்மீர் மாநில அரசின் அதிகாரிகள், இந்திய பாதுகாப்பு படைகள், அரசியல்வாதிகள், சாதாரண மக்கள் பங்களிப்போடு இந்தியாவின் மதசார்பின்மை, ஜனநாயக நம்பிக்கைத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட விரிவாகவும் கவனமாகவும் ஒரு வலை பின்னப்பட்டது. வன்முறைகளும், கல்வீச்சுகளும் தொடர்ந்தாலும் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையும், மோதல் தவிர்க்கும் நடவடிக்கைகளும் இதை உறுதி செய்தன.

1990களின் தொடக்கத்தில் இருந்த கலவர நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்காக ஆயிரக்கணக்கான இந்திய ராணுவத்தினரும், பொதுமக்களும் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அது சீர்குலைந்திருக்கிறது. அச்சத்துடன்கூடிய வாழ்க்கை நிலை மக்களை வாட்டுகிறது. தெருக்கள் போர்க்களமாகி, கலவரங்கள் தொடர்கதையாகின. இப்போது பயணங்களும், வர்த்தகமும், கல்வியும், வழிபாடும் தடைசெய்யப்பட்டுள்ளன.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370 மற்றும் 35ஏ பிரிவுகளை மோடி அரசு தாக்கித் தகர்த்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையை பாதுகாப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் செய்த உயிர் தியாகங்கள் அனைத்தும் வீணாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக பிளவு உண்டாக்கப்பட்டது.

அதாவது, இந்திய அரசின் பாகுபாடற்ற தன்மை பாழாக்கப்பட்டது. பாதுகாப்புப்படையின் தலையில் அனைத்து சுமைகளும் ஏற்றப்பட்டன. ஒரு மாதம் ஆன நிலையிலும் மக்கள் அமைதியாக இருப்பதாக அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டது காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு என்ற பிரச்சாரம் தொடர்கிறது.

காஷ்மீரிகள் இப்போது தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக கருதுகிறார்கள். அவர்களிடம் இருந்து முதல் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுவிட்டது. ஜம்மு மற்றும் லடாக் பகுதிகள் மீதான அவர்களுடைய உரிமைகள் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன. அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற இந்திய அரசின் கொள்கையும் விலக்கப்பட்டுவிட்டது. பாலக்கோட் தாக்குதல் உள்ளிட்ட அனைத்தும் பாகிஸ்தானை யோசிக்க வைத்திருக்கிறது. ஜம்மு மற்று லடாக் பகுதிகளில் இந்தியர்களை குடியேற்றி ஜனத்தொகையை அதிகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படலாம் என்று கருதப்படுகிறது.

காஷ்மீரிகள் தங்களுடைய அடையாளத்துக்காக 400 ஆண்டுகளாக பல்வேறு துரோகங்களை எதிர்கொண்டு இருக்கிறார்கள். காஷ்மீர் வரலாற்றில் உச்சபட்சமான துரோகம் என்பது 370ஆவது பிரிவை ரத்து செய்ததுதான் என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்திய அரசு தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதாலும், காஷ்மீரின் மதசார்பற்ற தன்மைக்கு மதசார்பற்ற இந்திய அரசு உறுதி அளிக்கும் என்பதாலும்தான் காஷ்மீர் முஸ்லிம்கள் நம்பிக்கையோடு இருந்தார்கள்.

இப்போது, அவர்களுடைய தனியுரிமையை பாதுகாக்கும் பிரிவு நீக்கப்பட்டதால், காஷ்மீர் முஸ்லிம்கள் எதிர்காலம் குறித்து அச்சத்துடன் இருக்கிறார்கள். இப்போதும் மதசார்பற்ற எதிர்காலம்தான் தங்களுக்கு நல்லது என்றே நம்புகிறார்கள்.

இந்துக்கள் அதிகம் வாழும் இந்தியாவுடன் இணைய காரணமான 370 ஆவது பிரிவு நீக்கப்பட்ட நிலையில், மதசார்பற்ற தன்மையும் நீக்கப்பட்டிருக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் கவனத்தை காஷ்மீர் திருப்பியிருக்கிறது. அவர்கள் இந்தத் துரோகத்திற்கு பழிதீர்க்க நேரம் பார்த்திருக்கிறார்கள்.

370 ஆவது பிரிவு என்பது தற்காலிக தீர்வுதான் என்பதை சொல்லும் இந்திய அரசு, காஷ்மீர் மக்கள்தான் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள் என்பதை சொல்ல மறுப்பது அவர்களை ஆத்திரப்படுத்துகிறது. இந்தியா தனது சட்டபூர்வ கடமையிலிருந்து தவறிவிட்டதாகவே பார்க்கிறார்கள்.

காஷ்மீர் மக்களின் நில உரிமை, வேலைவாய்ப்பு, இனக்குழுத்தன்மை, மதம், கலாச்சார சுதந்திரம் ஆகியவற்றுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காஷ்மீரிகளின் அதிகாரம் மொத்தமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

காஷ்மீரிகளுக்குள் ஒரு சீற்றம் கனன்று கொண்டிருக்கிறது. அதை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தூண்டிவிடும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. பாலஸ்தீனத்திற்குள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்து குடியேற்றங்களை உருவாக்கியது. ராணுவத்தைக் கொண்டு எதிர்ப்புகளை அடக்கியது. அதுபோல, காஷ்மீருக்குள் இந்தியா தனது ராணுவத்தின் உதவியோடு, பகையுணர்வு கொண்ட மக்கள்தொகையை எத்தனை காலத்திற்கு அடக்கப் போகிறது என்பதே இப்போது இருக்கிற வினா.

எல்லா வகையிலும் காஷ்மீரில் உருவாகியிருக்கிற சூழல் மிகவும் வித்தியாசமானது. காஷ்மீரு முழுமையாக அடைக்கப்பட்டிருக்கிறது. மக்களுடைய வீடுகளின் முன் பாதுகாப்புப்படை குவிக்கப்பட்டிருக்கிறது. கைதுகள் தொடர்கின்றன.

எனவேதான், இழப்பதற்கு தங்களிடம் இனி ஏதுமில்லை என்ற முடிவுக்கு காஷ்மீரிகள் வந்திருப்பதாக சொல்கிறார்கள். காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு இதுபோன்ற சீற்றம் மிகுந்த மனநிலைதான் தேவை. அத்தகைய ஒரு சூழலை இந்திய அரசே உருவாக்கியிருக்கிறது. காஷ்மீரிகளின் எதிர்ப்பை இந்திய ராணுவம் இறுக்கமாக கட்டி வைத்திருக்கிறது. அந்த இறுக்கம் சற்று தளர்ந்தால் போதும் என்று காஷ்மீரிகள் காத்திருப்பதாக கூறுகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT