ADVERTISEMENT

கர்நாடகாவில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை

09:59 AM Apr 24, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் குறித்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினார். அந்த வீடியோவில் திமுகவைச் சேர்ந்த முக்கியமானவர்களின் சொத்து மதிப்புகள் குறித்து காட்சிகள் இருந்தன. அண்ணாமலை வெளியிட்ட இந்த சொத்து பட்டியலில் திமுகவை ஜி ஸ்கொயர் நிறுவனத்தோடு இணைத்து பேசியிருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ள ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ' ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமோ அல்ல. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். பத்தாண்டுகளாக மக்கள் மத்தியில் கட்டுமானத்துறையில் மிகச் சிறந்த நிறுவனமாக இருக்கிறோம். தங்கள் நிறுவனம் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 12 பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய சொத்து மதிப்பு என அண்ணாமலை குறிப்பிட்டுள்ள தொகை தவறானது.

தவறான முறையில் நாங்கள் சொத்து சேர்த்திருப்பதாக மக்களை நம்ப வைக்கும் படி ஜோடிக்கப்பட்டுள்ளது. அதிகளவு நிலங்களை ஒரே சமயத்தில் கையகப்படுத்தியதாகவும், அதிக வருமானம் ஈட்டியதாகவும் தவறான பல கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார். அண்ணாமலையின் செயலால் பல ஆண்டு உழைப்பில் பெறப்பட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளது. படித்த மரியாதைக்குரிய தலைவர் முன்வைக்கும் கருத்துக்களை மக்கள் நம்பும் ஆபத்து இருக்கிறது' என விளக்கம் அளித்துள்ளது ஜி ஸ்கொயர் நிறுவனம்.

தொடர்ந்து சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவன அலுவலகங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தை தாண்டி கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் பெங்களூருவில் உள்ள கோரமங்களா என்ற இடத்தில் இருக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT