ADVERTISEMENT

“அந்த பெண் எடுக்க வேண்டாமென விட்டுப்போன சீட்டால் நான் கோடீஸ்வரன்” - பம்பர் லாட்டரி வென்ற கேரளா ஆட்டோ டிரைவர்

12:23 PM Sep 19, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரளா அரசு லாட்டரி சீட்டை நடத்தி வருகிறது. அதேபோல், கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் மற்றும் சித்திரை விசு, கிறிஸ்துமஸ், நியூ இயா், சரஸ்வதி பூஜை என விழாக் காலங்களில் பம்பர் லாட்டரிகளை அச்சிட்டு வெளியிடுகிறது. இதில் கேரளா பம்பர் லாட்டரி சரித்திரத்தில் இந்த ஓணம் பண்டிகையின் போது அறிவிக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி பரிசு தொகை தான் அதிகபட்சமாக உள்ளது.

இந்த லாட்டரி சீட்டின் விலை 500 ருபாய்க்கு விற்கப்பட்டது. பரிசு தொகை அதிகம் என்பதால் 500 ரூபாயை பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கானோர் லாட்டரி சீட்டை எடுத்தனர். விற்பனையை பொறுத்து இரண்டு தடவையாக அச்சடிக்கபட்ட லாட்டரி சீட் 66.57 லட்சம் லாட்டரி விற்பனை செய்யப்பட்டுள்ளது. 18-ம் தேதி லாட்டரி சீட் குலுக்கல் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒட்டு மொத்த கேரளா மக்களின் எதிர்பார்ப்பு யார் அந்த கோடீஸ்வர அதிர்ஷ்டசாலி என்பதில் தான் இருந்தது. டிக்கெட் வாங்கியவர்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களை நினைத்தபடி இருந்தனர்.

இந்த நிலையில் 3 மணிக்கு அதிர்ஷ்டசாலியின் பெயா் கேரளா லாட்டரி துறையால் அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடத்தில் அதிர்ஷ்டசாலியான திருவனந்தபுரம் ஸ்ரீவராகத்தை சோ்ந்த அனூப் (39) வீட்டிற்கு கேரளா மீடியாக்கள் படையெடுத்தனர். ஸ்ரீவராகம் ஏரியா பரபரப்பு அடைந்ததுடன் அனூப் பின் உறவினா்களும் நண்பா்களும் அங்கு குவிந்தனா். பின்னா் அனூப் தனது கா்ப்பிணி மனைவி மாயா மற்றும் முதல் குழந்தை அத்வைத்துடன் கூறும் போது, “டிவி யில் பார்த்து கொண்டியிருந்த போது நான் பழவங்காடி பகவதி லாட்டரி ஏஜென்சியில் இருந்து எடுத்த லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்துள்ளது என்று அறிவித்ததும் அப்படியே ஒரு சில நிமிடம் மகிழ்ச்சியில் உறைந்து போய் இருந்திட்டேன். ஆட்டோ டிரைவரான நான் கோடீஸ்வரன் ஆகிவிட்டேன் இவ்வளவு கோடிகளுக்கு நான் அதிபதியா என என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

சாதாரணமாக லாட்டரி சீட் எடுக்கும் பழக்கம் உள்ளவன் தான் நான். இதுவரை அதிக தொகையாக 5 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் அடித்து இருக்கிறது. ஆட்டோ வேலைக்காக ஓா்க்ஷாப்பில் விட்டு இருப்பதால் கையில் பணம் இல்லாததால் கடைசி நாள் வரை லாட்டரி சீட் எடுக்கவில்லை. கடைசி நாள் நண்பா் ஒருவனுடன் வேலைக்கு சென்று 450 ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தை வைத்து லாட்டரி சீட் எடுக்கலாம்னு நினைத்தேன். அதற்கு இன்னும் 50 ருபாய் தேவைப்பட்டதால் வீட்டுக்கு சென்று மனைவியிடம் சொல்லி குழந்தையின் உண்டியல் பணத்தில் இருந்து 50 ருபாய் எடுத்து லாட்டரி சீட் வாங்கினேன்.

லாட்டரி வாங்கும் போது முதலில் ஒரு சீட் எடுத்தேன் அந்த எண் இஷ்டபடாததால் பக்கத்தில் நின்ற பெண் ஒருவர் எடுத்து வேண்டாம்னு திருப்பி கொடுத்த அந்த லாட்டரி சீட்டை வாங்கினேன். அதற்கு தான் இந்த 25 கோடி ரூபாய் விழுந்துள்ளது. இங்கு ஆட்டோ ஓட்டமும் சரிவர இல்லாததால் மலேசியாவில் ஹோட்டல் தொழிலுக்கு போக கூட்டுறவு வங்கியில் 2 லட்சம் கடன் கேட்டிருந்தேன். வங்கியில் இருந்தும் 17-ம் தேதி கூப்பிட்டு கடன் ரெடி ஆகி விட்டது 19-ம் தேதி வாங்குங்கள் என சொன்னார்கள். ஆனால், அதே நாளில் தான் லாட்டரி சீட்டும் அடித்து விட்டது” என்று எல்லையில்லா மகிழ்ச்சியில் திக்குமுக்காடுகிறது அனூப் குடும்பம். அனூப்-க்கு 25 கோடியில் ஏஜென்சி கமிஷன் மற்றும் அரசு வரி போக 15.75 கோடி ருபாய் ஓரிரு நாளில் கிடைக்கும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT