ADVERTISEMENT

இமாச்சல் காங்கிரஸ் முதல்வர் ராஜினாமா - உண்மை என்ன?

03:04 PM Feb 28, 2024 | mathi23

இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்த தேர்தலில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வாகினர். அதே சமயம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 இடங்களிலும், கர்நாடகா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடம் என மொத்தம் 15 இடங்களிலும் நேற்று (27-02-24) மாநிலங்களவை எம்.பி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

ADVERTISEMENT

அந்த வகையில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரேயொரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நேற்று (28-02-24) நடைபெற்றது. அதில், ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்கள் இருந்தும், 25 எம்.எல்.ஏக்கள் கொண்ட பா.ஜ.க.வுக்கு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், 3 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். அதனால், பா.ஜ.க வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, அம்மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுப்பணித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த விக்ரமாதித்ய சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “தற்போதைய அரசியல் சூழலில் அரசின் அங்கமாக நான் நீடிப்பது சரியல்ல. அதனால், எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பலமுறை அவமானப்படுத்தியுள்ளார். அவமானப்படுத்தப்படுவதை எம்.எல்.ஏக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். கள நிலவரம் குறித்து கட்சியின் மேலிடத்துக்கு எடுத்துரைத்துள்ளேன். அதுபற்றி கட்சி மேலிடம் தான் முடிவெடுக்க வேண்டும். எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், கட்சி மற்றும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் எடுக்கப்படும்” என்று கூறினார்.

இதனையடுத்து, பா.ஜ.க தலைவர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் இன்று (28-02-24) காலை மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. அந்த வகையில், இமாச்சலப் பிரதேச சட்டசபை இன்று கூடியது. அப்போது, எதிர்க்கட்சி பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் அவையில், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதாகவும், சபாநாயகர் அறையில் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதனால், பா.ஜ.க எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் உட்பட 15 பா.ஜ.க எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவை சபாநாயகர் இன்று சஸ்பெண்ட் செய்வதாக அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதே வேளையில், இமாச்சலப் பிரதேச முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் பரவி வந்தது. அது இமாச்சலப் பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

பரவி வந்த செய்திகள் குறித்து இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நான் ராஜினாமா செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது ராஜினாமாவை யாரிடமும் கொடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சி ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும். நாங்கள் போராளிகள், பெரும்பான்மையை நிரூபிப்போம். நாங்கள் வெற்றி பெறுவோம், ஹிமாச்சல் மக்கள் வெற்றி பெறுவார்கள்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT