ADVERTISEMENT

கன்னடத்தில் பெயர்ப் பலகை; அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் எடுத்த முடிவு!

06:28 PM Feb 01, 2024 | mathi23

சமீபத்தில் பெங்களூரில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காததால், பெங்களூரில் உள்ள கன்னட மொழி இல்லாத பெயர்ப் பலகை கொண்ட வணிக நிறுவனங்களைக் குறிவைத்து கன்னட ஆதரவு அமைப்பினர் வன்முறை போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, வணிக நிறுவனங்களில் கன்னட மொழி உள்ள பெயர்ப் பலகையை வைக்க வேண்டும் என்ற அவசர சட்டத்தைக் கொண்டு வர கர்நாடகா அரசு முடிவு செய்தது.

ADVERTISEMENT

அதன் அடிப்படையில் கர்நாடகா மாநிலத்தில், கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் 60 சதவீதம் தாய்மொழியான கன்னடத்தில் எழுதி இருக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. மேலும், வரும் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் கன்னடத்தில் பெயர்ப் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டது. இந்த அவசர சட்டத்தை அங்குள்ள பலரும் வரவேற்றனர்.

ADVERTISEMENT

கர்நாடகா அரசு கொண்டு வந்த இந்த அவசர சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை கூட்டத்திலும் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த அவசர சட்ட மசோதாவை, கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கர்நாடக ஆளுநர், கர்நாடக அரசு கொண்டு வரும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்து திருப்பி அனுப்பிவிட்டார். இதற்கு காங்கிரஸ் அரசும், கன்னட அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "இந்த அவசர சட்டத்தை ஆளுநர் நிராகரித்திருக்கக் கூடாது. ஆளுநர் எடுத்த இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது மாநிலத்தின் கௌரவம் சார்ந்த விஷயம் ஆகும்" என்று கூறினார். இந்நிலையில், கர்நாடக ஆளுநர் எடுத்த இந்த முடிவு அந்த மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT