ADVERTISEMENT

விவசாயிகளின் கருப்பு தின போராட்டம் - காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு!

02:08 PM May 24, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஐந்து மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது டெல்லியின் எல்லைப் பகுதிகளில் முகாம் அமைத்து தங்கியுள்ள அவர்கள், மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாதவரை வீடு திரும்பப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர். மேலும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி சாலை மறியல், இரயில் மறியல் போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டனர். மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக குடியரசு தினத்தன்று விவசாயிகள் ட்ராக்டர் பேரணியும் நடத்தினர்.

இந்தநிலையில் பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டு அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, தங்களது போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைவதையொட்டியும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு முதன்முறையாக பதவியேற்ற 7ஆம் ஆண்டின் தினத்தையொட்டியும் மே 26ஆம் தேதியைக் கருப்பு தினமாக அனுசரிக்கப் போவதாக கூறியுள்ளது. மேலும் அன்றைய தினத்தன்று மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலும், வாகனங்களிலும், கடைகளிலும் கறுப்புக்கொடி ஏற்ற வேண்டும் எனவும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தநிலையில், விவசாயிகளின் இந்தக் கருப்பு தின போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல், கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. இதுகுறித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சிகள், சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் போரட்ட அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, கடந்த மார்ச் 12ஆம் தேதி, விவசாயிகளைக் கரோனா பெருந்தொற்றிலிருந்து காப்பாற்ற வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சிகள், உடனடியாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைத்த விகிதப்படி குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு, இது சம்மந்தமாக சம்யுக்தா கிசான் மோர்ச்சாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இந்தக் கடிதத்தில் சோனியா காந்தி, மு.க. ஸ்டாலின், சரத் பவார், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்ரே, தேவகவுடா, ஹேமந்த் சோரன், ஃபரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், டி. ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகிய 12 எதிர்க்கட்சி தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT