ADVERTISEMENT

குடியரசு தினத்தன்று பேரணி... உறுதியாக நிற்கும் விவசாயிகள்... பேச்சுவார்த்தைக்கு தயாராகும் மத்திய அரசு...

10:56 AM Jan 18, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாய சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒன்பது முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், இந்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. கடந்த வாரம் நடைபெற்ற 9ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் 40க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தையிலும், விவசாயிகளின் கோரிக்கைகள் முழுதாக ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், நாளை (19/01/2021) விவசாய சங்கங்களுக்கும் மத்திய அரசுக்குமான பத்தாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

மத்திய அரசு இந்தப் பேச்சுவார்த்தைக்காகத் தயாராகி வரும் சூழலில், குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாய சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "விவசாயிகளின் போராட்டத்தைக் களைப்பதற்கு பேச்சுவார்த்தை என்ற பெயரில் மத்திய அரசு பலமுறை முயன்றது. அது பலனளிக்கவில்லை. ஆதலால், அராஜக வழியை அரசு தற்போது தேர்ந்தெடுத்துள்ளது. என்ஐஏ, அமலாக்கத் துறை விசாரணைகள் மூலம் விவசாயிகளைப் பணிய வைத்துவிடலாம் என அரசு எண்ணுகிறது. அவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது.

குடியரசு தினத்தன்று மிக அமைதியான முறையிலும், ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் டிராக்டர் பேரணி நடைபெறும். எத்தகைய தடைகள் வந்தாலும் இந்தப் பேரணியை நடத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை குறித்து பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "புதிய வேளாண் சட்டங்களுக்குப் பெரும்பாலான விவசாயிகள் ஆதரவாக உள்ளனர். நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில், சட்டங்களில் தங்களுக்குப் பாதகமாக உள்ள அம்சங்களை விவசாயிகள் தெரிவிப்பார்கள் என நம்புகிறோம். எனவே, விவசாயிகள் தங்கள் பிடிவாதப் போக்கைக் கைவிட வேண்டும்" என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT