ADVERTISEMENT

ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பிய ஃபேஸ்புக் நிறுவனம்!

02:39 PM Aug 18, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தைப் பகிர்ந்த காரணத்திற்காக தற்காலிகமாக முடக்கப்பட்டது. பெற்றோரின் படத்தைப் பகிர்ந்ததன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டுவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் ட்விட்டர் இந்த நடவடிக்கையை எடுத்தது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரைச் சந்தித்தது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவைப் பகிர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டதற்காக, ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஃபேஸ்புக் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டது.

இதற்குப் பதிலளிக்காததால், ஃபேஸ்புக் இந்தியாவின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புத் தலைவர் (trust and safety head) சத்யா யாதவை தங்கள் முன் ஆஜராகுமாறு கூறி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியது. இதனையடுத்து ஃபேஸ்புக் நிறுவனம், ராகுல் காந்தியின் பதிவு மீது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை தொடர்பான அறிக்கையை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இதனையடுத்து தங்கள் முன் ஆஜராவதிலிருந்து சத்யா யாதவிற்கு விலக்கு அளித்தது.

இந்தநிலையில் ஃபேஸ்புக் நிறுவனம், சிறுமியின் பெற்றோரைச் சந்தித்தது தொடர்பான வீடியோவை நீக்கக் கோரி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் "உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் நீங்கள் இட்ட பதிவு, சிறார் பாதுகாப்புச் சட்டத்தின் 74ஆம் பிரிவு, போக்ஸோ சட்டத்தின் 23ஆம் பிரிவு, ஐபிசி 288ஏ சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் சட்டவிரோதமானது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நோட்டீஸிற்கு இணங்க அந்தப் பதிவை உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்" என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT