ADVERTISEMENT

ஓடும் ரயிலில் துப்பாக்கிச் சூடு; முன்னாள் ராணுவ வீரர் கைது 

03:27 PM Oct 14, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேற்கு வங்க மாநிலம், தன்பாத் பகுதியில் இருந்து தலைநகர் டெல்லி, சியல்டா பகுதி வரை செல்லும் ராஜ்தானி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் நேற்று (13-10-23) காலை இந்த விரைவு ரயில் டெல்லியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயிலில், டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் டிக்கெட் சோதனை மேற்கொண்டு வந்தார்.

அதன்படி, டிக்கெட் பரிசோதகர் பி-8 பெட்டியில் இருந்த பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டு இருந்தார். அப்போது, 41 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவரிடம் டிக்கெட் கேட்டபோது அவர், ஹவுரா செல்லும் ரயிலின் டிக்கெட்டை காண்பித்து தனக்கு இருக்கை ஒதுக்குமாறு கூறியுள்ளார். அதற்கு, டிக்கெட் பரிசோதகர் அவரிடம், சரியான டிக்கெட் இல்லாததால் இருக்கை ஒதுக்க முடியது என்று கூறியுள்ளார். இதனால், அந்த பயணி டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, டிக்கெட் பரிசோதகருக்கும் பயணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த பயணி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரயில் பெட்டிக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதனால், அந்த பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் பதற்றமடைந்தனர்.

உடனடியாக, டிக்கெட் பரிசோதகர் இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் கோடர்மா ரயில் நிலையத்தில் பயணியை கைது செய்வதற்கு தயாராக இருந்தனர். அதன்படி, ரயில் கோடர்மா நிலையத்திற்கு வந்த போது, பயணியை ரயிலில் இருந்து இறக்கி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அப்பயணியின் பெயர் ஹர்விந்தர் சிங் (41) என்பது தெரியவந்தது. மேலும், அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஹர்வீந்தர் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த ரயில்வே காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து கிழக்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹர்வீந்தர் சிங் டிக்கெட் எடுத்திருந்த போதும், தவறான ரயிலில் பயணித்ததே இந்த குழப்பத்திற்கு காரணம். மேலும், ஹர்வீந்தர் சிங் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் எந்த பயணிக்கும் காயமோ, உயிருக்கு ஆபத்தோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT