ADVERTISEMENT

“புதுச்சேரி அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்” - முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

06:30 PM Dec 12, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரி அரசு உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான கோப்புகளைத் தமிழக ஆளுநருக்கு அரசு அனுப்பியும் இதுவரை ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்டத்தை சில ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே நடத்தி வருகின்றனர். இதனால் பல உயிர்கள் பலியாகி உள்ளன. உடனடியாக புதுச்சேரி அரசு சட்டமன்றத்தைக் கூட்டி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். இந்தியாவில் சண்டிகர் மாநிலத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் மின்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடவில்லை. ஆனால் புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்று முதல்வரும் அமைச்சர்களும் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளனர்.

மின்துறை தனியார் மயமாக்கலை தடுப்பதற்காகத் தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்படும். புதுச்சேரியில் கோவில், பள்ளிகள் அருகே ஏற்கனவே நிறைய மதுபான கடைகள் உள்ளன. தற்போது வருமானத்தை குறி வைத்து ரெஸ்ட்ரோ பார் என்ற பெயரில் குடியிருப்பு, கோவில், பள்ளிகள் அருகே திறக்கப்பட்டு வருகிறது. இதனால் புதுச்சேரியில் கலாச்சார சீரழிவை முதலமைச்சர் ரங்கசாமி ஏற்படுத்தி வருகிறார். கோவில் மற்றும் பள்ளிகள் அருகே உள்ள மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். இதற்காக நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளேன்.

கலால் துறையில் இமாலய ஊழல் நடந்து வருகிறது. புதுவையில் குப்பை வாருவதில் ஊழல், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல். இதுபோன்ற பல வகையான ஊழல் நடந்து வருகிறது. முதலமைச்சரிடம் கையொப்பம் வாங்க வேண்டும் என்றால் அதற்காக நான்கு புரோக்கர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மூலமாகத் தான் முதலமைச்சரை நாட முடிகிறது. அதில் ஒரு புரோக்கருக்கு கோடி கணக்கில் சொத்து உள்ளது அவரது பெயரைத் தேவைப்படும் பட்சத்தில் ஆதாரத்துடன் வெளியிடுவேன்.

புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் சொன்னதில் எந்தவித தவறும் இல்லை. அந்தந்த கட்சியினரும் தனது ஆட்சி ஒரு மாநிலத்தில் மலர வேண்டும் என்று நினைப்பது நியாயம் தான். தமிழகத்தில் எந்த கூட்டணி தொடர்கிறதோ, புதுச்சேரியில் அதே கூட்டணி தொடரும்" எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT