ADVERTISEMENT

ஊழல் வழக்கு; பா.ஜ.க எம்.எல்.ஏவுக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு

12:13 PM Mar 08, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடகாவின் சென்னகிரி தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மாடல் விருபாக்‌ஷப்பா. இவரது மகன் பிரசாந்த் கர்நாடகாவின் மைசூர் சோப் நிறுவனத்தின் வாரியத் தலைவராக இருக்கிறார். கர்நாடகாவில் சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் துறைக்கு ரசாயனப் பொருட்களை வாங்குவதற்கு பல கோடி ரூபாய்க்கு அண்மையில் டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டது. டெண்டரை வழங்க ஒருவரிடம் 81 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் பிரசாந்த். முதற்கட்டமாக 40 லட்சம் ரூபாய் தர முன்வந்துள்ளார் டெண்டரை எடுக்க வந்தவர்.

இதனையொட்டி பெங்களூர் கிரசன்ட் சாலையில் உள்ள விருபாக்‌ஷப்பாவின் அலுவலகத்தில் மகன் பிரசாந்த் லஞ்சப் பணத்தை பெற்றுள்ளார். உடனடியாக லோக் ஆயுக்தா அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சென்ற அதிகாரிகள் பாஜக எம்எல்ஏவின் அலுவலகத்தில் இருந்து கட்டுக் கட்டாக மறைத்து வைக்கப்பட்ட 40 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். லஞ்சம் தர வேண்டியவர்களின் விவரங்களை பிரசாந்த் ஒரு துண்டுச்சீட்டில் எழுதி வைத்திருந்த நிலையில், அதிகாரிகள் வருவதைக் கண்டவுடன் வாயில் போட்டு விழுங்க முயன்றுள்ளார். துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் அந்த காகிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து பிரசாந்தை கைது செய்த லோக் ஆயுக்தா போலீசார் அவரது அலுவலகத்திலும் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் ரொக்கப் பயணத்தை லோக் ஆயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் மொத்தமாக எட்டு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக எம்எல்ஏ விருபாக்‌ஷப்பாவையும் போலீசார் தேடி வந்தனர். ஆனால், தலைமறைவான மாடல் விருபாக்‌ஷப்பா கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ரூ. 5 லட்சம் பிணைத்தொகை மற்றும் உத்தரவாதத்துடன் கூடிய இடைக்கால ஜாமீனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 5 நாட்களுக்குப் பிறகு தனது சொந்த தொகுதிக்கு வந்த விருபாக்‌ஷப்பாவை பூ தூவி, பட்டாசு வெடித்து பாஜகவினர் வரவேற்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT