ADVERTISEMENT

தேர்தல் பத்திரம்; ‘முழு தகவல்களும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பு’ - எஸ்.பி.ஐ.!

05:03 PM Mar 21, 2024 | prabukumar@nak…

தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி (15.02.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் 5 நீதிபதிகளும் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என ஒருமித்த கருத்துகளைத் தீர்ப்பாக வழங்கினர். மேலும் மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம், பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும். அதனை மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணையப் பக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர். ஆனால் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.

ADVERTISEMENT

இது தொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 11 ஆம் தேதி (11.03.2024) நடைபெற்ற விசாரணையில், மார்ச் 12 ஆம் தேதி மாலைக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வெளியிடவும், அதனை மார்ச் 15 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தனது இணையத்தில் வெளியிடவும் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை, தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி கடந்த 12 ஆம் தேதி (12.03.2024) வழங்கியது. மேலும் தேர்தல் பத்திர விபரங்களை, தனது இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் தேர்தல் பத்திரங்களை நிறுவனங்கள், தனி நபர்கள் வாங்கிய விவரங்கள் தேதி வாரியாக இடம்பெற்றிருந்தன. அதாவது 337 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் விபரங்களும், 426 பக்கங்களில் அதனை பணமாக மாற்றிய கட்சிகளின் விவரங்களும் அடங்கி இருந்தன.

ADVERTISEMENT

அதே சமயம் தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பான வழக்கு கடந்த 15ஆம் தேதி (15.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீலிடப்பட்ட கவரில் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? என எஸ்.பி.ஐ.க்கு கேள்வி எழுப்பினர். மேலும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வழங்க சொல்லியிருந்தோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களையும் எஸ்.பி.ஐ. வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இத்தகைய சூழலில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 18 ஆம் தேதி (18.03.2024) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ‘உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்புப்படி பத்திர எண்களை வெளியிட வேண்டும். தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ.யின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. இந்த வழக்கின் தீர்ப்பை செயல்படுத்துவதில் எஸ்.பி.ஐ வங்கியின் அணுகுமுறை சரியில்லை. ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள எண்ணையும் ஏன் எஸ்.பி.ஐ வங்கி இன்னும் தெரிவிக்கவில்லை?. தேர்தல் பத்திரம் சார்ந்த அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். மறைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் எஸ்.பி.ஐ. பொதுவெளியில் வெளியிட வேண்டும். ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண்ணை கட்டாயம் வெளியிட வேண்டும். இந்த தேர்தல் பத்திர எண்களை வரும் மார்ச் 21ஆம் தேதிக்குள் அனைத்தையும் வெளியிட வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (21.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தேர்தல் பத்திர எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி வழங்கி உள்ளது. அதாவது தேர்தல் பத்திர சீரியல் எண்களுடன், தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய முழு தகவல்களையும் தேர்தல் ஆணையத்தில் எஸ்.பி.ஐ. வங்கி சமர்ப்பித்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் விரைவில் இணையதளத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT