ADVERTISEMENT

“மிட்டாய் பரிசு தந்திரங்கள் எடுபடாது;10 ஆண்டு பாவங்கள் கழுவப்படாது” - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் 

07:34 AM Aug 30, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருப்பது தேர்தல் தோல்வி பயம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ‘ரக்‌ஷா பந்தன், ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பரிசாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படும். சகோதரிகளுக்கு பிரதமர் மோடி வழங்கும் பரிசுதான் இந்த சிலிண்டர் விலை குறைப்பு.

ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த விலை குறைப்பையும் சேர்த்து 400 ரூபாயை குறைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த விலை குறைப்பு வர்த்தக ரீதியில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துபவர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு இன்று (30.09.2023) முதல் அமலுக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை குறைப்பின் மூலம் நாடு முழுவதும் 31 கோடி பயனாளர்கள் பயனடைவர்.’ என மத்திய அரசு அறிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 417 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்தே வந்தது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை 1,118 ரூபாயாக உள்ளது. ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 700 ரூபாய் வரை விலையை உயர்த்திய பாஜக தற்பொழுது 200 ரூபாய் விலை குறைத்துள்ளது.

இந்த விலை குறைப்புக்கு காரணம் தேர்தல் தோல்வி பயம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, 'வாக்குகள் குறையும்போது தேர்தல் பரிசுகள் வழங்கப்படும். சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்டுள்ள நாடகம். பொதுமக்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை கருணையின்றி கொள்ளையடித்த மோடி அரசு., தாய்மார்கள், சகோதரிகள் மீது காட்டும் போலியான பாசம் இது. 400 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய சமையல் எரிவாயு சிலிண்டரை 1,100 ரூபாய்க்கு விற்ற அரசு மோடி அரசு. சாமானியர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தது. சாமானியர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்த மோடி அரசுக்கு முன்பே இந்த யோசனை வராதது ஏன்?

140 கோடி இந்தியர்களை ஒன்பது ஆண்டுகளாக சித்ரவதை செய்துவிட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் மிட்டாய் பரிசு வழங்கும் தந்திரங்கள் எடுபடாது. கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் செய்த பாவங்கள் இதன் மூலம் கழுவப்படாது. இதனை பாஜக உணர வேண்டும். பாஜக அரசால் உருவாக்கிய பணவீக்கத்தை சமாளிக்க பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை தருகிறது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இது தொடங்கப்பட்டு விட்டது. 200 ரூபாய் விலை குறைப்பு என்பது மக்களின் கோபத்தை தணிக்காது என்பதை மோடி உணர வேண்டும். இந்தியா கூட்டணியை கண்டு மோடி அச்சப்படுவது நன்றாகத் தெரிகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT