ADVERTISEMENT

தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்கள் 5 பேர் சஸ்பெண்ட்! 

02:51 PM Jul 26, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஜூலை 18- ஆம் தேதி அன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை, உறுப்பினர்கள் நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து, பதாகைகளுடன் முழக்கமிட்டு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதனால் அவை அலுவல நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று (25/07/2022) பிற்பகல் மக்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களான ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பால் உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்டவையைத் திரும்பப் பெறக்கோரி பதாகைகளுடன் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக, மக்களவை உறுப்பினர்களான ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் ஆகியோரை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று (26/07/2022) காலை மாநிலங்களவை கூடிய போது, விலைவாசி உயர்வு, எம்.பி.க்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை முதலில் நண்பகல் 12.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், மக்களவையிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை முதலில் பிற்பகல் 11.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

பின்னர், மாநிலங்களவை மீண்டும் கூடிய போது, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து, அமளியில் ஈடுபட்டதால், தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழி என்விஎன் சோமு, சண்முகம், என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன், அப்துல்லா மற்றும் மற்ற கட்சிகளைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான சுஷ்மிதா தேவ், டோலாசென் உள்பட 11 பேர் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT