ADVERTISEMENT

“ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா?” - தேவகவுடா தாக்கு

07:58 PM Apr 24, 2024 | mathi23

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

ADVERTISEMENT

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “எனக்கு சாதியின் மீது ஆர்வம் இல்லை. நியாயத்தின் மீதுதான் ஆர்வம். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை சாதியை கணக்கெடுப்பது என்று நினைக்க வேண்டாம். அதில் பொருளாதார மற்றும் நிறுவனக் கணக்கெடுப்பையும் சேர்ப்போம். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு முக்கியமான படியாகும். இப்போது நிலைமை என்ன?, எந்தத் திசையில் இருக்க வேண்டும்? என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்துவோம்.

25 கோடீஸ்வரர்களுக்கு 16 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக பாஜக அரசு வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே எனது கேரண்டி. சாதிவாரிக் கணக்கெடுப்பின்போது பொருளாதாரம் மற்றும் கல்வி குறித்தும் கணக்கெடுப்படும்” என்று கூறினார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் தேவகவுடா தேர்தல் பரப்புரையில் மேற்கொண்டார். அப்போது அவர், “ராகுல் காந்தி சொத்துக் கணக்கெடுப்பு நடத்தி செல்வத்தை மறுபங்கீடு செய்ய விரும்புகிறார். அவர் ஒரு மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா? அவர் ஒரு புரட்சியைக் கனவு காண்கிறாரா?. சொத்து மறுபங்கீடு பற்றி பேசிய ராகுல் காந்தி, சந்தை சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து இந்த நாட்டின் செல்வத்தை உயர்த்திய இரண்டு காங்கிரஸ் பிரதமர்களை அவமதித்து அவமானப்படுத்தியுள்ளார். இரண்டு காங்கிரஸ் பிரதமர்களும் செய்ததெல்லாம் தவறு என்று மறைமுகமாக சொல்ல முயல்கிறார். மன்மோகன் சிங் அரசு பிறப்பித்த அரசாணையைக் கிழித்தெறிந்தது போல் அவர்களின் பொருளாதார சீர்திருத்தங்களைக் கிழித்தெறிந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT