ADVERTISEMENT

நாடாளுமன்றத்தில் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட நபர்! - போலீஸுக்கு நீதிமன்றம் விதித்த கெடு!

06:40 PM Dec 15, 2023 | tarivazhagan

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது எனப் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

அதேபோல், நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான நேற்று (டிச. 13ம் தேதி) மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசினர். மேலும், 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.

ADVERTISEMENT

அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்.பி.க்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், நாடாளுமன்றத்துக்கு உள்ளே வண்ணப் புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனோரஞ்சன் (34), சாகர் ஷர்மா (26) என்பதும் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே(25) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நேற்று (14-12-23) ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அந்த 4 பேரையும் 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு அனுமதி கோரினர். ஆனால், கைது செய்யப்பட்ட நால்வருக்கு 7 நாள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு முன்னதாக, கைது செய்யப்பட்ட நால்வரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் லலித் ஜா என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவாகி இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லலித் ஜாவை பிடிப்பதற்கு தொழில்நுட்ப உதவியுடன் டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று (14-12-23) லலித் ஜா தானாகவே டெல்லி காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார். சரணடைந்த லலித் ஜாவை கைது செய்த காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பிறகு லலித் ஜாவும் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தரப்பில், “லலித் ஜா தான் இந்த சதி வேலைக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். லலித் ஜாவை பல்வேறு நகரங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டியுள்ளது. அதேபோல், அவரின் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைக் கைப்பற்றி அதிலும் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் காரணமாக இவரை விசாரிக்க எங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் வேண்டும்” என்று வாதிடப்பட்டது. டெல்லி காவல்துறையின் முறையீட்டை கேட்ட பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் லலித் ஜாவுக்கு 7 நாட்கள் காவல் விதித்து உத்தரவிட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT