ADVERTISEMENT

இந்திய - சீன எல்லையில் தற்போதைய நிலை: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

11:49 AM Feb 11, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா - சீனா இடையே கடந்த வருடம் எல்லைப் பிரச்சனை காரணமாக மோதல் வெடித்தது. இதில், 20 இந்திய இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில், 45 பேர் வரை பலியானதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் தொடர் பதற்றம் நிலவிவருகிறது. இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்துள்ளன.

இந்த நிலையில், இருநாடுகளுக்கும் இடையே நடந்த ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட முடிவின்படி, இருநாடுகளும் எல்லையில் படைக்குறைப்பை தொடங்கியுள்ளதென்று சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக சீன ஊடகம் நேற்று (10.02.2021) செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் லடாக் எல்லையில் தற்போதுள்ள நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவையில் விளக்கமளித்தார். அப்போது அவர் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டருகே, படைகளை விலக்குவதில் சிக்கல்கள் தீர்க்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ராஜ்நாத் சிங், "கட்டுப்பாட்டு கோட்டில் அமைதியான சூழ்நிலையை நிலைநாட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். இருதரப்பு உறவுகளைப் பேணுவதை இந்தியா எப்போதும் வலியுறுத்துகிறது. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக உள்ளோம் என்பதை நமது பாதுகாப்புப் படைகள் நிரூபித்துள்ளன.

சீனாவுடனான நமது தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள், பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் படைக்குறைப்பு செய்வதற்கான உடன்படிக்கைக்கு வழிவகுத்தன. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்தியா மற்றும் சீனா ஒருங்கிணைந்த முறையில் அங்கு படைகளைக் குறைக்கும்.

லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகிலும், அதனைச் சுற்றியுள்ள அவர்களின் பகுதியிலும் சீனா பெரிய அளவிலான படைகளையும், ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் சேகரித்து வைத்தது. நமது படைகளும் போதுமான அளவிற்கு திறம்பட படைகளைக் குவித்தது. உண்மையான கட்டுப்பாட்டு கோட்டருகே படைகளைக் குறைப்பது தொடர்பான சில சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை, முழுமையான படைக்குறைப்பு விரைவாக செய்யப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இரு தரப்பும் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டிற்கு உடன்பட வேண்டும். அதை மதிக்க வேண்டும். இரண்டாவதாக, எந்தவொரு கட்சியினாலும் ஒருதலைப்பட்சமாக அங்குள்ள நிலையை மாற்ற முயற்சிக்கக்கூடாது. மூன்றாவதாக, அனைத்து சமரசங்களும் இரு தரப்பாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் ஆகிய மூன்று கொள்கைகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று பேச்சுவார்த்தையின்போது இந்தியா சீனாவிடம் தெரிவித்தது.

சீனா தனது படைகளை பங்கோங் ஏரியின் வடக்குக் கரையில், ஃபிங்கர் 8 க்கு கிழக்கே வைத்திருக்கும். இந்தியா தனது படைகளை ஃபிங்கர் 3 க்கு அருகிலுள்ள நிரந்தர தளத்தில் வைத்திருக்கும். மேலும் இருநாடுகளும் ஏரியின் வடக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவதைத் தாற்காலிகமாக ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளன. பாங்கோங் ஏரி பகுதியில் முழுமையான படைக்குறைப்பு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் மூத்த தளபதிகளின் அடுத்தக் கூட்டத்தைக் கூட்டவும், மீதமுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT